×

நெய்வேலி ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம் அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடருவோம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: நெய்வேலி ராதிகா, விக்னேஷ் உள்ளிட்டவர்கள் தற்கொலை விவகாரத்தில் அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடருவோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள குறவன்குப்பத்தை சார்ந்த நீலகண்டன் மகள் கல்லூரி மாணவி ராதிகா என்பவரும் அவருடைய உறவினரும் காதலருமான விக்னேஷ் என்பவரும் 10-6-2019 அன்று குறுகியநேர இடைவெளியில் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். முகநூல் பதிவுகளால் நேர்ந்த விபரீதமான விளைவுகள்தாம் இந்த துயரமான சாவுகள் என்பது தாளமுடியாத வேதனையாக உள்ளது. சமூகவலைதளங்களை பயன்படுத்துவது தொடர்பாக, குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிய வலுவான சட்டமொன்றை இயற்ற வேண்டுமெனவும், ஆபாச வலைதளங்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமெனவும் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
 தற்போது முகநூலில் கருத்துக்களை பதிவிட்டவர்களில் ஒருவரான பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் வல்லரசு ஆகியோரை தற்கொலைக்கு தூண்டியதாக காவல்துறை கைது செய்துள்ளது. காவல்துறையினரின் நடவடிக்கைகளில் விடுதலை சிறுத்தைகள் தலையிடவில்லை. ஆனால், பிரேம்குமார் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்பதாலேயே, இந்த துயரச்சாவுகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம் போல மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பும் சதி முயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளது.

 தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ அல்லது தனிப்பட்ட இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும். திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது வீண்பழி சுமத்துவது எந்த வகையில் நியாயமாகும். வேண்டுமென்றே, மக்களிடையே சாதியின் பெயரால் மோதலை தூண்டிவிட்டு, சமூக பதற்றத்தை உருவாக்குவதும், சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துவதும்தான் பாமகவின் திட்டமிட்ட சதி நோக்கமாக உள்ளது. இத்தகைய அரசியல் சதிநோக்கையும் சமூகவிரோத போக்கையும் வன்மையாக கண்டிக்கிறேன். தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்னைகளோடு வேண்டுமென்றே விடுதலை சிறுத்தைகளை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற வகையில் அபாண்டமாக பழிசுமத்தி தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவது பாமக நிறுவனர் ராமதாசின் வாடிக்கையாக உள்ளது. இது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக மட்டுமின்றி, அப்பாவி தலித் மக்களுக்கு எதிராகவும் அனைத்து சமூக மக்களிடையே கடும் வெறுப்பை விதைப்பதாக உள்ளது.  மேலும், இது தலித்துகளுக்கு எதிரான சாதி வெறியாட்டத்தை தூண்டுவதாகவும் உள்ளது. இந்த பெருந்தீங்கிலிருந்து சமூகநல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் ராமதாஸ் மீது விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடுக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Neyveli Radhika ,Vignesh ,Ramadoss , Neyveli Radhika, Vignesh ,suicide, Thirumavalavan
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...