கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: கரும்பு விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரும்பு விவசாயமே தமிழகத்தில் அழிந்துவிடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 2011-12ம் ஆண்டில் தமிழகத்தில் 23.79 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், 2018-19ல் 8.40 லட்சம் டன்னாக குறைந்து விட்டது.
 இதுகுறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதால் 8 தனியார் கரும்பு ஆலைகளும், ஒரு கூட்டுறவு கரும்பு ஆலையும் நடப்பாண்டில் கரும்பு பிழிவதை நிறுத்தியிருக்கிறது. மற்ற கரும்பு ஆலைகள் தங்களது பிழி திறனில் மூன்றில் ஒரு பங்கு தான் செய்யக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரும்பாலான தனியார் கரும்பு ஆலைகள் வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

 இதற்கு என்ன காரணம் என்பது குறித்து அதிமுக ஆட்சியாளர்கள் கவலைப்படாமல் கட்சியை நடத்துவது ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா? என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கரும்பு ஆலைகள் நெருக்கடியான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிற அதேநேரத்தில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஏறத்தாழ ரூ. 500 கோடிக்கு மேலாக இருக்கிறது. இதை தமிழக அரசு நேரிடையாக விவசாயிகளுக்கு வழங்கினால் அதை கடனாக திரும்ப செலுத்துவதற்கு கரும்பு ஆலைகள் தயார் எனக் கூறியும் இதுகுறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்டது கரும்பு விவசாயம் தான். ஆனால் தமிழக அரசு வறட்சி மாவட்டம் என்று அறிவிக்கிற அளவுகோலின்படி கரும்பு விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்க முடியாது. இந்த அறிவிப்பை வைத்து எந்த விவசாயியும் கடன் நிவாரணம் கோர முடியாத வகையில் தமிழக அரசு மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து ஐந்தாண்டுகளாக வறட்சியில் சிக்கியுள்ளதால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்குவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பெற்ற கடனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதை செய்வதன் மூலமே தமிழகத்தில் கரும்பு விவசாயிகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.எனவே, கரும்பு விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பதற்கு கடன் நிவாரணம் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை அதிமுக அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்கவில்லையெனில் கரும்பு விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து கடுமையான போராட்டத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Tags : fight ,Central ,state governments ,KS Azhagiri , sugar , state governments, KS Azhagiri, warning
× RELATED கரும்பு சாகுபடி வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவ அரசு 6 கோடி நிதி