சாதாரண மக்களின் புகாரை கண்டுகொள்வதில்லை நடிகைகள் காணாமல் போனால் உடனே நடவடிக்கையா?: தமிழக போலீசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நடிகைகள்  காணாமல் போனதாக புகார் வந்தால் மட்டுமே காவல் துறை நடவடிக்கை எடுக்குமா  எனறு போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த மகேஸ்வரி என்பவர்   கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி தனது 19 வயது மகள் கவுசல்யா காணாமல் போனதாக திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கோரி மகேஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
   இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனுகுறித்த விவரங்கள் கிடைக்கவில்லை என்று  தெரிவித்தார்.

 இதைக்கேட்ட நீதிபதிகள், நான்கு மாதத்திற்கு முன்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. சாதாரண மக்கள் புகார் அளித்தால் போலீசாரின் நடவடிக்கைகள் இப்படி தான் இருக்குமா. மேலும், மாதந்தோறும்  சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அதற்கான பணியை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசாரின் உறவினர்கள், அல்லது அவர்கள் வீட்டில் இப்படி யாரேனும் காணாமல் போய் இருந்தால் இப்படித்தான் சாதாரணமாக  எடுத்து கொள்வார்களா. நான்கு மாதங்களாக இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.  திரைபட நடிகைகள் காணாமல் போனதாக புகார் வந்தால்  மட்டுமே காவல் துறை செயல்படுமா. மாதாமாதம் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் அதற்கான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள். மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்த விவரங்களை  அறிக்கையாக வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மத்திய அரசு பதில் தர வேண்டும்மத்திய, மாநில அரசுகளிடம் நீதிபதிகள் கேள்விகள் கேட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
* இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்க்கிறது. தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் இந்த கேள்விகளுக்கு பதில் தரவேண்டும்.
* ஆள் காணவில்லை என்று புகார்கள் வரும்போது இந்திய தண்டனைச் சட்டத்தில் 174 என்ற பிரிவு மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இந்த பிரிவு தவிர வேறு பிரிவுகள் உள்ளனவா?
* இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 174ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதா?
* கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆள் காணவில்லை என்று எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?
* ஆள் காணவில்லை வழக்கில் 10 ஆண்டுகளில் எத்தனை சிஎஸ்ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
* புகார் வந்தவுடன் விசாரணை நடத்தப்பட்டு எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்?
* எத்தனை வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது?
* தண்டனை விகிதம் என்ன?
* எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன?இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரலும் பதில் தரவேண்டும்.Tags : actresses ,Tamil Nadu ,High Court , Does,ordinary,disappear, immediately?
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...