×

ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து அருப்புக்கோட்டையில் பெண்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

அருப்புக்கோட்டை: ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அருப்புக்கோட்டையில் பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வறட்சி தாண்டவமாடுகிறது. மக்கள் பல கிமீ தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தண்ணீர் கிடைக்காததால்  மக்கள் முற்றுகை, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் கடந்த சில மாதங்களாக 30 லட்சம் லிட்டர்  தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. வைகை வறண்டதால், வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்குவது முற்றிலும் தடைபட்டுள்ளது.தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரே,  நகராட்சியிலுள்ள 36 வார்டுகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி பகுதியில் நிலவும் தொடர் மின்தடை காரணமாக தாமிரபரணி தண்ணீரும் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் சுழற்சி முறையில் 15 நாட்களுக்கு ஒரு  முறை வழங்கப்பட்ட தண்ணீர், ஒரு மாதத்திற்கு மேலாகியும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இதனால் ஆத்திரமடைந்த நகராட்சிக்கு உட்பட்ட 24, 25 வார்டு பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் திரண்டு அருப்புக்கோட்டை - விருதுநகர் ரோட்டில், பாவடிதோப்பு பகுதியில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்க  கோரி கோஷம் எழுப்பினர்.டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகராட்சி பொறியாளர் காளீஸ்வரி வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு சென்ற  மாணவ, மாணவிகள் மற்றும் இதர பணிக்கு சென்றவர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.



Tags : Women ,road ,Aruppukkottai , Condemned ,drinking water,Aruppukkottai
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...