×

கன்னியாகுமரியில் 45 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம் மறு தேர்தல் நடத்தக்கோரிய வழக்கு: ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

சென்னை: கன்னியாகுமரியில் 45.000 பேரின் பெயர்கள்  வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர்,  சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  இதனால் நாடாளுமன்ற தேர்தலில் இந்த 45 ஆயிரம் பேரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையின மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே, அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு  மனுவில் கூறப்பட்டுள்ளது.

 இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு பதில் தருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு  விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர். வழக்கு நேற்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் நிரஞ்சன் ஆஜராகி, முகவரி மாற்றம் உள்ளிட்ட  பல்வேறு காரணங்களால் 39 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 2016 முதல் தேர்தல் அறிவிப்பு வரை அவர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

Tags : voters ,Kanyakumari , Removal ,re-election,High Court
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...