×

உள்ளாட்சி தேர்தல் வரை அதிமுக ஆட்சி நீடிக்காது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

கரூர்: உள்ளாட்சி தேர்தல் வரை எடப்பாடி ஆட்சி நீடிப்பது சந்தேகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையொட்டி வாக்காளர்களுக்கு திமுக சார்பில் நன்றி அறிவிக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு  வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே நேரடியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி நேற்று காலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். முதலில் அவர்  அரவக்குறிச்சி வந்தார். அங்கு ஊராட்சி சபை கூட்ட மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஏராளமானோர் வந்திருந்தனர். மேடையில் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி, கரூர் எம்.பி. ஜோதிமணி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்கள்  வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஸ்டாலின் பொதுமக்களிடம் தற்போதைய நிலவரங்கள் குறித்து சில கேள்விகள் கேட்டு உரையாடினார்.ஸ்டாலின்: திமுக ஆட்சிக்கு வரவில்லையே என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா?பொதுமக்கள்: இன்று இல்லாவிட்டாலும், நாளை நீங்கள்தான் ஆட்சிக்கு வரப்போகிறீர்கள். நீங்கள் வந்துதான் எங்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும். நீங்கள் ஆட்சிக்கு வந்து எல்லாவற்றையும் செய்வீர்கள் என காத்திருக்கிறோம்.

ஸ்டாலின்: அரவக்குறிச்சியில் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறதா?பொதுமக்கள்: அரவக்குறிச்சியில் 10 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கிராமங்களில் 15 நாள் ஆகும். எந்த அடிப்படை வசதியும் இல்லை. ஜீவா நகருக்குள் வந்து பாருங்கள் என்றனர்.
அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கையில், `101 எம்.எல்.ஏக்கள் திமுகவில் உள்ளனர். வெற்றிபெற்ற இவர்கள் எல்லாரும் மக்களை போய் சந்திக்க வேண்டும் என்று நான் சொல்லி உள்ளேன். நாம்தான் மக்களை போய் சந்தித்து  அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்து அதிகாரிகள், கலெக்டர்களை பார்த்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சொல்லி இருக்கிறேன். மக்கள் நம்மை தேடி வரக்கூடாது. நாம்தான் மக்களை தேடிப்போய் பார்க்க வேண்டும்.  விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும். அதிலும் நாம் வெற்றிபெறுவோம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு, சாலை, சாக்கடை வசதிகள் போன்ற பிரச்னைகளை தீர்க்க முடியும். எனவே உள்ளாட்சி தேர்தலிலும் நாம் வெற்றிபெற்று குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்போம்’ என்றார்.
இதையடுத்து பவித்திரம் ஜெயந்தி நகர் மற்றும் தவிட்டுபாளையம் ஆகிய இடங்களிலும் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இரு இடங்களிலும் மக்கள் குடிநீர் பிரச்னை குறித்து சரமாரி புகார் கூறினர்.

தவிட்டுபாளையத்தில் கிராம ஊராட்சி கூட்டம்போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களின் சரமாரியான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது: ஏற்கனவே உங்களிடம் ஓட்டு கேட்டு வந்தேன். இப்போது நன்றி சொல்ல வந்திருக்கிறேன். இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னை, சாலை வசதி, விளக்கு வசதி பற்றி கூறினீர்கள். இந்த பிரச்னை இந்த தொகுதியில் மட்டுமில்லை. தமிழகம்  முழுவதும் இருக்கிறது. பெண்கள் பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். குடிநீர் பிரச்னை கண்டித்து சாலை மறியல் நடக்கிறது.உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. திமுக ஆட்சியில் பல கூட்டு குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டோம். 3 வருடமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. நடத்தப்போவதாக கூறுகிறார்கள். எப்போது நடத்த போகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவரை இந்த ஆட்சி இருக்குமா என்பதும் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இன்னும் ஒன்றரை வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரும், அதற்குள்  உள்ளாட்சி தேர்தல் வந்தாலும், சட்டமன்ற தேர்தல் வந்தாலும், நீங்கள் இப்போது தந்தது போல திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஸ்டாலினிடம் கொடுத்தனர். முன்னதாக அவருக்கு ஊர் மக்கள் சார்பில் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டது.

கடையில் டீ குடித்த ஸ்டாலின்
அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பள்ளபட்டிக்கு ஸ்டாலின் புறப்பட்டு சென்றார். தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அங்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்ட இலவச  தையல் பயிற்சி மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை திமுக சார்பில் 14 பேருக்கு வழங்கப்பட்டது. இதனை ஸ்டாலின் வழங்கி வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். மேற்கண்ட 2  இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஸ்டாலினுடன் கைகுலுக்கி செல்பி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிகளை  முடித்துக்கொண்டு கரூர் திரும்பும் வழியில் அரவக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு டீக்கடைக்கு  ஸ்டாலின் சென்று டீ குடித்தார். அவருடன் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., ஜோதிமணி எம்.பி, கரூர் சின்னசாமி, நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோரும் டீ குடித்தனர்.

Tags : AIADMK ,elections ,MK Stalin , AIADMK,local elections, MK Stalin
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல்...