×

பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் சேரும்படி தெலுங்கு தேசம் எம்எல்ஏ.க்களுக்கு சட்டப்பேரவையில் நேரடி அழைப்பு: ஜெகன்மோகன் பேச்சு; சந்திரபாபு கொதிப்பு

திருமலை: ‘‘தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு வந்தால் சேர்த்துக் கொள்வேன்,’’ என்று ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பகிரங்க அழைப்பு விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில், புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்க, சட்டப்பேரவையில் நேற்று தேர்தல் நடந்தது. இதில், ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த தம்மிநேனி சீதாராம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி சார்பில் எம்எல்ஏ அச்சண் நாயுடு, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், அழைத்துச் சென்று சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர்.

பின்னர், அவரை பாராட்டி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:
ஆந்திர சட்டப்பேரவையின் 2வது சபாநாயகராக தம்மிநேனி சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் 6 முறை எம்எல்ஏ.வாகவும், பல துறைகளின் அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இங்கு, கடந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவதூறாக பேசப்பட்டுள்ளார். பேரவையில் எதெல்லாம் நடக்கக் கூடாதோ, அதெல்லாம் நடந்துள்ளது.

2014 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்த 67 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில், அவர்களில் 23 பேரை விலை கொடுத்து வாங்கி ஆளுங்கட்சி இருக்கையில் அமரவைத்து, 4 பேருக்கு அமைச்சர் பதவியும்  வழங்கினர். அப்போது, கட்சி மாறியவர்களை தகுதி நீக்கம் செய்யும்படி நாம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

ஆனால், நடந்து முடிந்த இந்த தேர்தலில் அதே 23 எம்எல்ஏ.க்கள், 3 எம்பிக்களை மட்டுமே அக்கட்சிக்கு கடவுள் வழங்கியுள்ளார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள அவர்களில் 5 பேரை நாம் இணைத்துக் கொண்டால், தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என, என்னிடம் எங்கள் கட்சியினர் கூறினர். ஆனால், அவர்கள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன்.

யாராவது அந்தக் கட்சியில் இருந்து வருவதாக இருந்தால், ராஜினாமா செய்து விட்டு வந்தால் மட்டுமே சேர்த்துக் கொள்வேன். அதையும் மீறி யாராவது விலகி வந்தால் சபாநாயகர் தானாக முன்வந்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஜெகன் இவ்வாறு பேசியபோது, தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பேரவையில் இருந்தார்.

சபாநாயகரை பாராட்டி அவர் பேச முற்பட்டபோது, மைக் சத்தம் குறைவாக இருந்தது. அதனால், மைக் சத்தத்தை அதிகரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அப்போது, ஆளுங்கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘‘நான் எதற்கும் பயப்படமாட்டேன். நான் மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளேன்.  

எனவே, எதையும் சந்திக்க தயாராக உள்ளேன். சட்டப்பேரவை கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,’’ என்றார். தொடர்ந்து இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் கவர்னர் நரசிம்மன் உரையாற்ற உள்ளார். நாளையும், நாளை மறுதினமும் சட்டப்பேரவைக்கு விடுமுறை நாள் என்பதால் 17ம் தேதி முதல் கவர்னர் உரை மீதான விவாதம் நடைபெறும்.

கவுரவம் பார்த்த சந்திரபாபு:
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலின்போது சபாநாயகர் தேர்வுக்கு பின்னர், அப்போதைய முதல்வரான சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இணைந்து, சபாநாயகரை அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்தனர். ஆனால், நேற்று சபாநாயகரை அவரது நாற்காலியில் அமர வைக்க எதிர்க்கட்சி தலைவரான சந்திரபாபு நாயுடு செல்லவில்லை. அவருக்கு பதிலாக எம்எல்ஏ அச்சண் நாயுடுவை அனுப்பி வைத்தார். இதனால், பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tags : resignation ,YSR Congress ,Jaganmohan ,Chandrababu , Resigns, resigns, YSR Congress, joining MLAs to Telugu, legislative, direct call, Jaganmohan, Chandrababu boiling
× RELATED ஜெகன்மோகனை கொல்ல முயற்சி உரிய விசாரணை...