×

ககன்யான் திட்டத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்

புதுடெல்லி: “ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, விண்வெளியில் இந்தியாவுக்காக சொந்தமாக விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும்,” என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். சந்திரயான் -1 திட்டம்  வெற்றி பெற்றதை அடுத்து சந்திரயான்-2  விண்கலத்தை அடுத்த மாதம் 15ம் தேதி ஏவுவதற்கு இஸ்ரோ ஏற்பாடு செய்து வருகிறது. இதை கடந்தாண்டே விண்ணில் செலுத்த திட்டமிட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஜூலை 15ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவது பற்றி டெல்லியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “2022ம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், ‘ககன்யான் திட்டம்’ செயல்படுத்தப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்படும்.

பின்னர், இந்தியாவுக்காக விண்வெளியில் பிரத்யேகமாக விண்வெளி ஆய்வு மையம் அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நாம் சர்வதேச விண்வெளி மையத்தின் அங்கமல்ல. நமது விண்வெளி மையம் மிக சிறியதாக இருக்கும். அது, நுண்ணுயிரியல் சோதனை முயற்சிகள் மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படும். விண்வெளி மையத்தின் எடை 20 டன் மட்டுமே. இது குறித்த முன்மொழிவானது ககன்யான் திட்டத்துக்கு பின் அரசின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த 5 முதல் 7 ஆண்டுகளாகும்,” என்றார்.

தற்போது விண்வெளியில் செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையம், 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இதில் தங்கி ஆய்வு செய்வதற்காக கடந்த 2000ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். இது ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய விண்வெளி அமைப்பு, அமெரிக்காவின் நாசா, ஜப்பானின் ஜாசா, கனடாவின் சிஎஸ்ஏ மற்றும் ரஷ்யாவின் ரோஷ்காஸ்மஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் அமைக்கப்பட்டது. இது விண்வெளியில் இயங்கும் மிகக்பெரிய ஆய்வுக்கூடமாகும். இதனிடையே, சீனாவும் தனியாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : K.Sivan ,space station ,India ,ISRO , Gaganyan Project, India, a separate space center, ISRO chair, K. Sivan
× RELATED சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம்