×

திருப்பதிக்கு குட்கா எடுத்து வந்ததாக தமிழக பக்தர்கள் மீது போலீசார் தாக்குதல்: அலிபிரி சோதனைச் சாவடியில் பரபரப்பு

திருமலை: திருப்பதி கோயிலுக்கு குட்கா எடுத்து வந்ததாக அலிபிரி சோதனைச் சாவடியில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் புனித தன்மையை காக்கும் வகையில் புகையிலை, குட்கா, மது, மாமிசம் மற்றும் வெடிப்பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அலிபிரி சோதனைச்சாவடியில் ஆந்திர மாநில போலீசார்,  தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள், சிறப்பு அதிரடி படை போலீசார் 24 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுவாமி தரிசனத்துக்காக வந்த சென்னை, செங்கல்பட்டை சேர்ந்த 45 பக்தர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் டில்லிபாபு என்ற பக்தர் கொண்டு வந்த ஒரு பையில் குட்கா வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உடமைகளை சோதனை செய்த பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளை டில்லிபாபு மீண்டும் எடுத்ததாக தெரிகிறது.

இதனால் போலீசாருக்கும் டில்லிபாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போலீசார், டில்லிபாபுவை சரமாரியாக தாக்கினர். இதை தடுக்க முயன்ற சக பக்தர்கள் மீதும் போலீசார் தாக்கினார்கள். இதனால், தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 


Tags : pilgrims ,Tamil Nadu ,Gudka ,Tirupathi ,checkpoint ,Alipari , Tirupati, Gudkha, Tamil Nadu devotees, police, attack
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...