×

பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது குஜராத் திசை மாறியது வாயு புயல்: ஓமனை நோக்கி நகர்கிறது

அகமதாபாத்: அதிதீவிர புயலாக மாறி மிரட்டிய வாயு புயல், வடமேற்காக நகர்ந்து திசை மாறியதால் குஜராத் மாநிலம் பெரும் பாதிப்பில் இருந்து தப்பியது.  அம்மாநிலத்தின் கடலோர பகுதிகள் வழியாக வாயு புயல் ஓமனை நோக்கி நகர்கிறது. அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் ‘வாயு’ புயலாக வலுப்பெற்று, அதிதீவிரமடைந்தது. இப்புயல் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் - டையூ இடையே நேற்று பிற்பகலில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. புயலை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கையில் முன்னேற்பாடுகளை செய்தன.

இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகளில் வசித்த 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். புயல் மீட்புப்பணியில் ஈடுபட 36 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயலை எதிர்கொள்வதற்காக ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு குழு, கடலோர காவல் படையினர் குஜராத்திற்கு விரைந்தனர்.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உண, குடிநீர், மருந்துகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. போர்பந்தர், பவன்நகர், கெசோத் மற்றும் கண்ட்லா விமான நிலையங்கள் மூடப்படுவதாக இந்திய விமான போக்குவரத்து ஆணையமும் அறிவித்தது. அவற்றில் வந்து செல்லும் அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு புயல் திசை மாறி வடமேற்கு பகுதி வழியாக நகரத் தொடங்கியது. இதனால், குஜராத்தில் கரையை கடக்க வாய்ப்பில்லை என அகமதாபாத் வானிலை ஆய்வு மையம் நேற்று காலை தகவல் வெளியிட்டது. ‘புயலின் கண் பகுதி குஜராத் மாநிலத்தில் நுழையாது. ஆனாலும், புயலின் வெளிவட்ட பகுதி, சவுராஷ்டிரா கடலோர பகுதிகள் வழியாக கடந்து செல்லும்.

இதன் காரணமாக, கிர் சோம்நாத், ஜூனாகர், போர்பந்தர்,  துவாரகா மற்றும் டையூ ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் இருக்கும். அடுத்த 12 மணி நேரத்திற்கு மணிக்கு அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனாலும், குஜராத் மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்படவில்லை. அடுத்த 48 மணி நேரத்திற்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகலில் புயல் சவுராஷ்டிரா கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து அங்கு சூறைக்காற்றுடன் மழை பெய்த் தொடங்கியது. புயல் திசை மாறியதால் குஜராத் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். நிவாரணப் பணிக்காக சென்னை, மும்பையில் இருந்து கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ‘‘கடற்படை கப்பல்களில் 5000 லிட்டர் குடிநீர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிக்காக 7 விமானங்கள், 3 ஹெலிகாப்டர்கள் கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன,’’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதே போல, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்காக கிர்கிஸ்தான் சென்றைடந்த பிரதமர் மோடியும், குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை போனில் தொடர்பு கொண்டு நிலவரங்களை கேட்டறிந்தார். வாயு புயலால், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரைகளில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டன. கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இப்புயல் மீண்டும் கடலிலேயே பயணம் செய்து, பாகிஸ்தான் வழியாக ஓமனை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருளில் மூழ்கிய 560 கிராமங்கள்:
புயல் முன்னெச்சரிக்கையாக சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 560 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் இருளில் தவித்தனர். புயல் கடந்த பிறகு விரைவில் மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என மின்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், 1,200 மீன்பிடி படகுகள் குஜராத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 60 மணி நேரம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதால், மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க கடலோர காவல் படை அறிவுறுத்தி உள்ளது.

86 ரயில்கள் ரத்து:
புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேரவல், ஓகா, போர்பந்தர், பாவ்நகர், புஜ் மற்றும் காந்திதம் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய 86 ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. வேரவல் - அம்ரேலி, அம்ரேலி-ஜுனாகத், தேல்வதா-அவரவல் ஆகிய இடங்களுக்கு இடையே இயங்கிய ரயில்கள் நேற்று முன்தினமும், நேற்றும் ரத்து செய்யப்பட்டது.

மீட்பு பணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்க மேற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ராஜ்கோட் மண்டலத்திற்கும் பாவ்நகர் மண்டலத்திற்கும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு கடலோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர். 37 ரயில்கள் பாதி தூரத்திற்கு மட்டுமே இயக்கப்பட்டது.

Tags : Gujarat ,blow ,Omaha , The great damage, escape of Gujarat, diversion,gas storm
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...