×

விவசாயிகளை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் நிறுத்தவேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

கோபி: ‘விவசாயிகளை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக நிறுத்தவேண்டும்.இல்லையென்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என முத்தரசன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே விவசாய நிலத்தில் உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கப்படும் இடத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு எதிரான யுத்தத்தை மத்திய, மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களில் விவசாயிகளிடம் ஒப்புதலோ, அனுமதியோ பெறாமல், இழப்பீடு வழங்காமல் எதேச்சதிகார முறையில் உயர் அழுத்த மின் கோபுரங்களை காவல்துறையை பயன்படுத்தி அதிகாரிகள் அமைத்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி கால சட்டத்தை பயன்படுத்தி விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த செயலை அனுமதிக்க முடியாது. விவசாயிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும். இல்லையெனில், அவர்கள் முயற்சி வெற்றி பெறாது. கோவையில் இருந்து பெங்களூருக்கு பெட்ரோல் கொண்டு செல்லும் திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன், உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி, பெட்ரோல் கொண்டு செல்லும் பணி ஆகிய அனைத்து திட்டங்களையும் நிறுத்த வேண்டும்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எந்த பணிகள் நடந்தாலும் 20 சதவீத கமிஷன் கிடைக்கும் என்பதால்தான் இந்த திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு உறுதியாக உள்ளது. சேலம், தர்மபுரி காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட மக்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை. இந்த திட்டத்தை ஆரம்பித்தால் மக்கள் எதிர்த்து போராடுவார்கள்.
அதற்கான விளைவை அரசு சந்திக்க நேரிடும். விபரீத விளைவுகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Tags : Muthrasan , Farmer, affect, all plan, stop, kisser, assertion
× RELATED சுகாதாரத்துறையின் தவறால் இறந்த 5...