×

சென்னை, காரைக்குடியை தொடர்ந்து தேனியிலும் சர்ச்சை கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க வருமாறு ஓபிஎஸ்க்கு அழைப்பு: ‘தர்மயுத்த’ ஆதரவாளர்கள் பெயரில் போஸ்டர் யுத்தம்

ஆண்டிபட்டி: ‘கட்சி, ஆட்சிக்கு தலைமையேற்க வாருங்கள்’ என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமையே இருக்க வேண்டும் என, மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கடந்த 8ம் தேதி பேட்டி அளித்தார்.இது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னையில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில், உள்கட்சி விவகாரங்களை வெளியில் பேச தடை விதிக்கப்பட்டது.

அப்போது, ‘பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்’ என சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும்,  ‘அதிமுகவின் பொதுச்செயலாளராக அமைச்சர் செங்கோட்டையனை அறிவிக்க வேண்டும்’ என அவரது ஆதரவாளர்கள் சிவங்கை மாவட்டம், காரைக்குடியிலும் போஸ்டர்களை ஒட்டினர்.

இந்த போட்டாபோட்டியில் தற்போது துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் குதித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் நேற்று ஓபிஎஸ்சுக்கு ஆதரவான போஸ்டர்கள் பளிச்சிட்டன. அதில், ‘அம்மா மூன்று முறை முதல்வர் ஆக்கிய, தர்மயுத்த நாயகர் ஓபிஎஸ் ஐயா அவர்களே.. கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்க வாருங்கள், இது ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாகும்.

இவண்: தர்மயுத்த தொண்டர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் படம், தேனி மாவட்ட கலைத்துறை செயலாளர் வெள்ளைபாண்டியன், ஆண்டிபட்டி முன்னாள் நகர செயலாளர் ராமச்சந்திரன் படங்களும் இடம் பெற்றுள்ளன. இதனால்  தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : party ,dispute ,Karaikudi ,supporters ,war , Chennai, Karaikudi, continuously, honey in the dispute, party, leadership , office, call the OPS
× RELATED நாம் தமிழர் கட்சிக்கு மைக்...