×

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12.70 கோடியில் ஸ்மார்ட் கார்டு: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு படிக்கும் 70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.12.70 கோடியில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 63 லட்சத்து 96 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மேலும், நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 30 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள், கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவர், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் என மொத்தம் ரூ.84 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரம் செலவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 
இதுதவிர 2019-20ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் செலவில் சுயவிவரங்களை பதிவு செய்யும் வசதியுடன் திறன் அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்த திறன் அட்டைகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவர்களுக்கு முதல்வர் எடப்பாடி திறன் அட்டைகளை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பங்கேற்றனர்.


Tags : Edappadi , Tamilnadu, 1st to 12th, 70 lakhs, students Rs.12.70 crore, smart card
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்