×

சீருடையில் கைது செய்து சட்டவிரோத காவல் எஸ்ஐக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:விருதுநகர் மாவட்டம், சூலக்கரை காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றியவர் குமாரவேல். இவர் 6 மாதத்தில் 4 இடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதுகுறித்து முறையிடுவதற்காக கடந்த 2000ம் ஆண்டில் விருதுநகர் எஸ்பியின் முகாம் அலுவலகத்திற்கு குமாரவேல் சென்றார்.

அப்போது தன்னை பணி செய்யவிடாமல் தடுத்து, தகராறில் ஈடுபட்டதாக எஸ்பி அலுவலக டிரைவர் புகார் அளித்துள்ளார். இதன்ேபரில் கடந்த 1.8.2000ம் அன்று சீருடையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்ட எஸ்ஐ குமாரவேல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தன்னை பொய்புகாரில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், தானும் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் சீருடையில் இருந்த நிலையிலேயே தன்னை கைது செய்து சிறையில் அடைத்தது சட்டவிரோதம். இதனால் தனக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு காரணமான போலீசாரிடம் இருந்து தனக்கு இழப்பீடாக ரூ.1 கோடி பெற்றுத் தர வேண்டுமென ஐகோர்ட் கிளையில் மனு செய்திருந்தார்.

மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர் இழப்பீடு கோரி இங்கு மனு செய்ய முடியாது. உரிய இடத்தில் தான் பரிகாரம் கோர வேண்டுமெனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து குமாரவேல், ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் ஆகியோர் விசாரித்தனர்.

மனுதாரர் வக்கீல் ஜனாத் அகமது ஆஜராகி, ‘‘மனுதாரர் பொய் புகாரில் தான் கைது செய்யப்பட்டார். சீருடையில் இருந்த நிலையில் கைது செய்தது சட்டவிரோதம். அவரது சமுதாய மதிப்பு பாதித்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியம்.

இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்றார். அரசுத் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘மனுதாரர் மீதான புகார் திரும்ப பெறப்பட்டது. வழக்கில் இருந்து மனுதாரர் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே, இழப்பீடு வழங்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சீருடையில் இருந்த நிலையில் கைது செய்யப்பட்டு அரைமணி நேரம் சட்டவிரோதமாக காவலில் இருந்துள்ளார். பின்னர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதில், மனுதாரரது அடிப்படை உரிமை மீறப்பட்டதை கவனிக்க வேண்டும். கைதின்போது சட்டப்படியான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை. இதனால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரிகள் கடமையை செய்ய தவறியுள்ளனர். இதில் எந்த சமரசத்திற்கும் வரமுடியாது. அதே நேரம் ரூ.1 கோடி இழப்பீடும் வழங்க முடியாது. எனவே, மனுதாரருக்கு அரசுத் தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Arrest in uniform, illegal detention SI, compensation, government, jordan branch
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...