×

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை முடியாத நிலையில் பெண் எஸ்.பி. டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு? தலைமைச் செயலாளர் தலைமையில் இன்று கூட்டம்

சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீசில் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி உள்பட 6 எஸ்பிக்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கூட்டம் இன்று நடக்கிறது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும். அதன் ஒரு கட்டமாக சில நாட்களுக்கு முன்னர் கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதேபோல ஐஜிக்களுக்கு கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்தநிலையில் எஸ்பிக்களாக உள்ள 6 அதிகாரிகளுக்கு டிஐஜிக்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் டிஜிபி அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது.

அதில் நேரடியாக ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த சிவில் சப்ளை எஸ்பி ரூபேஷ்குமார் மீனா, சிபிசிஐடி எஸ்பி பிரவீன்குமார் அபினவ், மத்திய அரசு பணியில் உள்ள நரேந்திரன் நாயர், சிபிஐ எஸ்பியாக உள்ள விஜயேந்திர பிதாரி ஆகிய 4 பேருக்கும் குரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்து தற்போது எஸ்பியாக உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் சத்தியப்பிரியா, ஆனி விஜயா ஆகியோருக்கு டிஐஜிக்களாக பதவி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் 6 பேருக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்தில் இருந்து தமிழக உள்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பதவி உயர்வு குறித்து முடிவு எடுக்க உள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள எஸ்பி ஆனி விஜயா, மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நிலுவையில் உள்ளது. அவர் திருச்சியில் ரயில்வே எஸ்பியாக பணியாற்றியபோது, முறைகேடு செய்ததாகவும், லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த உள்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஆனி விஜயா மீது நடவடிக்கை எடுக்கும்படி உள்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் இந்த விசாரணை அறிக்கையில் திருப்தி இல்லை. அவர் மீதான புகாரை மீண்டும் விசாரிக்கும்படி உள்துறை கேட்டுக் கொண்டது. இதற்கிடையில் இந்தக் குற்றச்சாட்டை ரத்து செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், தங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் அறிக்கை அனுப்பினர். வழக்கமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் ஒரு அதிகாரி மீது குற்றச்சாட்டு குறித்த விசாரணை நிலுவையில் இருந்தால் அவருக்கு பதவி உயர்வு வழங்குவதில்லை. ஆனால், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக, பதவி உயர்வுக்கான பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : meeting ,TIG Today ,Chief Secretary , Vigilance, police inquiry, inability, female SP, promotion to DIG?
× RELATED ஆந்திர மாநில புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்பு