அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எல்லா வரம்பையும் மீறி விட்டது பாஜ: சோனியா தாக்கு

ரேபரேலி: ‘‘அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கண்ணியத்தின் அனைத்து வரம்புகளையும் பாஜ மீறி விட்டது,’’ என சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ரேபரேலியில் ஐமு கூட்டணி தலைவரான சோனியா காந்தி வெற்றி பெற்றார்.

அமேதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில், தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க சோனியா காந்தி நேற்று முன்தினம் ரேபரேலி சென்றார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்காவும் உடன் சென்றார்.

அங்கு நடந்த கூட்டத்தில் சோனியா பேசுகையில், ‘‘இம்முறை தேர்தல் நியாயமாக நடந்ததா, இல்லையா என்பதை மக்கள் ஒவ்வொருவரும் அறிவார்கள். அதிகாரத்தை கைப்பற்ற, ஆளும் கட்சியே கண்ணியத்தின் அனைத்து வரம்புகளையும் மீறிவதை விட துரதிஷ்டவசமானது வேறு எதுவும் இல்லை.

கடந்த சில ஆண்டாகவே தேர்தல் நடைமுறையில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்புகின்றன. எதுவுமே தீயில்லாமல் புகையாது,’’ என்றார். கேரளாவின் வயநாடு தொகுதியில் மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற ராகுல், பிரதமர் மோடி வெறுப்பையும், சகிப்பின்மையும் பரப்புவதாக  கடுமையாக தாக்கி பேசிய நிலையில் சோனியாவும் பாஜ.வை விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

‘தண்டிப்பேன்’
சோனியாவுடன் ரேபரேலி சென்றிருந்த பிரியங்கா, காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியபோது, ‘தேர்தல் வெற்றிக்கு பாடுபடாமல் ஏமாற்றிய நிர்வாகிகளை விரைவில் கண்டுபிடித்து தண்டிப்பேன்,’’ என்றார்.

Tags : Sonia ,attack ,BJP , Power, capture, all range, violation of the BJP, Sonia attack
× RELATED என்பிஆர் ஒரு மாறுவேடமிட்ட என்ஆர்சி...