×

மிரண்டு ஓடிய மாடு முட்டித்தள்ளியதில் 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த மாமியார், மருமகள் உயிருடன் மீட்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மிரண்டு ஓடிய மாடு முட்டித்தள்ளியதில், 80 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த மாமியார், மருமகள் உயிருடன் மீட்கப்பட்டனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நிர்மலா(30). இவரது மாமியார் முனியம்மாள்(55). இவர்கள் இருவரும் நேற்று மாலை தங்களது மாடுகளை மேய்ச்சலுக்குக்காக அழைத்து சென்றனர்.

அதே கிராமத்தில் உள்ள விளைநிலம் அருகே, அவர்களது மாடு ஒன்று திடீரென மிரண்டு ஓடியது. இதனை தடுக்க முயன்ற நிர்மலாவையும், மாமியார் முனியம்மாளையும் மாடு முட்டி தள்ளியது. இதில் நிலை தடுமாறிய இருவரும் அருகில் இருந்த 80 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்தனர். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, கிணற்றில் இருந்து மாமியார், மருமகளை உயிருடன் மீட்டனர். பின்னர், அவர்களை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாடு முட்டியதில் 80 அடி ஆழக்கிணற்றில் மாமியார், மருமகள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : mother-in-law ,daughter-in-law , Creeping cow dirty, 80 feet deep down, mother-in-law, daughter-in-law
× RELATED 9 ஆண்டுக்கு முன் இறந்த தொழிலதிபரின்...