×

சுற்றுச்சூழல் சிக்கல்கள் தீர்ந்தன ஆஸி.யில் நிலக்கரி சுரங்கப் பணி அதானி நிறுவனத்துக்கு அனுமதி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்க திட்டத்துக்கான பணிகளை தொடங்குவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள கலீலி ஆற்றுப்பள்ளத்தாக்கில் கார்மிகேல் நிலக்கரி சுரங்கம் திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சுற்றுச்சூழல் மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு, கருப்பு கழுத்து குருவி இன பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதன் காரணமாக பணிகளை தொடங்க ஆஸ்திரேலியா அரசு தடை விதித்திருந்தது. உலகிலேயே மிக பெரிய நிலக்கரி சுரங்க திட்டமாக இது கருதப்படுகிறது. சமீபத்தில், இந்த நாட்டில் நடந்த பொதுத்தேர்தலில் பிரதமராக ஸ்காட்மோரிசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஒரு வார காலத்தில் அதானி குழுமத்தின் சுரங்க திட்டத்துக்கான தொடக்க பணிகளை துவங்க மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது.

அழிந்து வரும் கருப்பு கழுத்து இன குருவியை பாதுகாக்கும் அம்சமானது குழுமத்தின் முக்கிய சுற்றுச்சூழல் திட்டமாக இடம் பெற்றிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த மே 31ம் தேதி நிலக்கரி சுரங்க திட்டத்துக்கான முதல் அனுமதியை அதானி குழுமம் பெற்றது. இந்நிலையில் திட்டத்துக்கான இறுதி மற்றும் கடைசி அனுமதியை குயின்ஸ்லாந்து மாகாண அரசு வழங்கியுள்ளது. நிலக்கரி சுரங்க திட்டத்தினை செயல்படுத்தும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சமீபத்திய பாதிப்பை அதானி குழுமம் சமர்பித்துள்ளது. இதனை சமர்பித்து ஓரிரு நாட்களில் திட்டத்தின் தொடக்க பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்து அதானி குழுமம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், பிரதானமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அம்சம் இடம் பெறாததால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அனுமதி கிடைத்ததை தொடர்ந்த, இன்னும் ஓரிரு நாட்களில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்க திட்ட பணிகளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : ASE ,Coal Mining Service , Environmental, Problems Solved, Aussie, Coal Mining Work, Adani Company, Allowed
× RELATED 3-ம் நபர் தலையீடு தேவையில்லை;...