×

நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை எதிர்க்க காங்கிரஸ் முடிவு: சில அம்சங்களை மாற்ற வலியுறுத்தல்

புதுடெல்லி: முத்தலாக் மசோதாவில் உள்ள சில அம்சங்களை எதிர்க்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. முத்தலாக் முறையில் விவாகரத்து செய்வதை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) மசோதா, கடந்த மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்னர், அது மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது. அங்கு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், 16வது மக்களவையின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்ததால், மசோதாவும் காலாவதியாகி விட்டது.

இந்த மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு உறுதியாக உள்ளது. புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த மாதம் தொடங்கும் 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடரில் முத்தலாக் உட்பட 10 சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், முத்தலாக் மசோதாவில் உள்ள சில அம்சங்களை எதிர்க்கப் போவதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது.

இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மானு சிங்வி கூறுகையில், ‘‘இந்த மசோதாவில் உள்ள சில அம்சங்களை கடந்த முறையே நாங்கள் எதிர்த்தோம். அதை ஏற்று, மசோதாவில் அரசு திருத்தம் செய்தது. தற்போதைய தொடரிலும் எங்கள் கருத்துகளை அரசு ஏற்றுக்கொண்டால், நிறைய நேரம் மிச்சமாகும். உதாரணமாக, விவாகரத்து செய்யப்படும் பெண்ணின் நிதி பாதுகாப்பு அம்சத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்,’’ என்றார்.

Tags : Congress ,Parliament , Congress, Muttalak Bill, Oppose, Congress, Decision
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...