×

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன் பசு விழுங்கிய 5 பவுன் சாணத்தில் கிடைத்தது: உரிமையாளரிடம் ஒப்படைத்தார் ஆசிரியர்

திருவனந்தபுரம்: கேரளாவில் மாடு விழுங்கிய 5 பவுன் தங்க தாலி, 2 ஆண்டுகளுக்குப் பிற சாணத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதை உரியவரிடம் ஒப்படைத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷூஜா உல் முக். இவரது மனைவி ஷாஹினா.

பள்ளி ஆசிரியர்களான இவர்களுக்கு விவசாய நிலமும் உள்ளது. இவர்களின் நிலத்திற்காக அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரிடம் இருந்து ஒரு லாரி சாண உரத்தை வாங்கினர். ஸ்ரீதரன், அப்பகுதியில் உள்ள வீடுகள், மாட்டு பண்ணைகளில் இருந்து மாட்டு சாணத்தை வாங்கி, அதை உரமாக்கி விவசாயத்துக்காக விற்று வருகிறார்.

உல் முக்கும், ஷாஹினாவும் 2 தினங்களுக்கு முன் தாங்கள் வாங்கிய சாண உரத்தை பயிர்களுக்கு போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாணத்தில் 5 பவுன் தங்க தாலி சங்கிலி இருந்ததை ஷாஹினா கவனித்தார். அதில், இலியாஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. உல் முக் அந்த சங்கிலியை சுத்தம் செய்து போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலம் பல்வேறு குழுக்களுக்கு அனுப்பினார்.

இதை பார்த்த இலியாஸ் என்பவர் உல் முக்கை தொடர்பு கொண்டு, ‘அந்த சங்கிலி எனக்கு சொந்தமானது. 2 ஆண்டுகளுக்கு முன் எனது மனைவி வீட்டில் வளர்த்த பசுவுக்கு புல் வைத்துக் கொண்டிருந்த போது தாலியை கழற்றி அருகில் வைத்திருந்தார். அப்போது, அந்த செயினை காணவில்லை. பல இடங்களில் தேடினோம்  கண்டுபிடிக்க முடியவில்லை. புல்லுடன் சேர்த்து மாடு அந்த தாலியை விழுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது.

அடுத்த சில நாட்கள் மாட்டு சாணத்தை பார்த்தோம். ஆனால், சங்கிலி கிடைக்கவில்லை. பின்னர். அந்த பசுவை விற்றுவிட்டோம். இப்போது, அந்த பசு எங்கிருக்கிறது என எங்களுக்கு தெரியாது. ஆனால், நீங்கள் பதிவிட்டுள்ள தாலி எங்களுடையதுதான்’ என கூறி, தாலியில் உள்ள சில அடையாளங்களையும் குறிப்பிட்டார்.

இதையடுத்து, உல் முக் அந்த தாலியுடன் சடையமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கு போலீசார் முன்னிலையில் அதை இலியாசிடம் ஒப்படைத்தார். 2 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த 5 பவுன் தாலி சங்கிலி கிடைத்ததால் இலியாஸ் மகிழ்ச்சியுடன் சென்றார். உல் முக்கின் இந்த நேர்மையை போலீசார் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags : Kerala ,owner ,teacher , Kerala got 2 pounds, 2 years old, swallowed cows 2 years ago
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு