×

அமெரிக்கா உடனான மோதலால் பதற்றம் ஈரான் தலைவர்களுடன் ஜப்பான் சமரச முயற்சி

டெஹ்ரான்: ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நேற்று சென்று அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வளைகுடாவில் பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தீவிரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவி வந்ததால், அந்நாட்டுடன் செய்திருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். மேலும், ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்த அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை மற்ற நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் அந்நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என கூறியது. இதனால் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

இதனால், ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்பினர் வளைகுடா பகுதியில் சில விரும்பத்தகாத நடவடிக்கையில் இறங்கி வருகின்றனர். சவுதி எண்ணெய் கப்பல் ஒன்று சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளானது. சவுதி விமான நிலையம் மீது ஏமனில் செயல்படும் ஹைத்தி தீவிரவாதிகள் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் காயம் அடைந்தனர். இவர்களும் ஈரானின் ஆதரவு தீவிரவாதிகள்தான். இதையடுத்து, ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்தது. ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அமெரிக்கா தனது விமானத் தாங்கி போர்க்கப்பல் குழுவை வளைகுடாவில் தாயார் நிலையில் நிறுத்தியுள்ளது. இதனால் வளைகுடாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதை தவிர்ப்பதற்காக ஈரானின் நட்பு நாடான ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நேற்று சென்றார். கடந்த 1979ம் ஆண்டுக்குப்பின், ஜப்பான் பிரதமர் ஈரான் சென்றது இதுவே முதல் முறை. ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனாய், அதிபர் ஹாசன் ரூகானி ஆகியோரை அபே சந்தித்து பேசினார். அதன்பின் பேட்டியளித்த சின்சோ அபே கூறுகையில், ‘‘தற்போது இங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இங்கு எந்நேரமும் மோதல் உருவாகும் சூழல் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மோதல் எப்படியாவது தவிர்க்கப்பட வேண்டும். இந்த ஒரே எண்ணம்தான், என்னை ஈரான் வர வைத்தது’’ என்றார்.


டிரம்ப் தகுதி இல்லாதவர்


ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவிடம் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனே கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபர் டிரம்ப், தகவல் பரிமாற்றத்துக்கு தகுதியற்ற நபர். அவருக்கு நான் பதில் அளிக்க மாட்டேன்,’’ என்றார்.

ஜப்பான் டேங்கர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்?

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஈரான் சென்றுள்ள நேரத்தில், 2 ஜப்பான் எண்ணெய் டேங்கர்கள் ஈரான் கடல் எல்லை அருகே ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் விபத்தில் சிக்கின. ஒரு கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது.  மற்றொரு கப்பலில் அடிப்பகுதி சேதமடைந்துள்ளது. இது இயற்கையாக நடந்த விபத்தா அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களா என தெரியவில்லை. இரு கப்பல்களில் இருந்தும் 44 மாலுமிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த இரு கப்பல்களுக்கும் உதவ, அமெரிக்க கடற்படை விரைந்தது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் ஜாரிப் , ‘ஜப்பான் பிரதமர் ஈரான் தலைவர்களை சந்தித்து பேச்சவார்த்தை நடத்தும்போது, 2 ஜப்பான் எண்ணெய் டேங்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Japan ,Iran ,US , United States, Iran, Japan, to try to reconcile
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...