தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு சீன அதிபரிடம் மோடி குற்றச்சாட்டு: ஷாங்காய் மாநாட்டில் பேச்சுவார்த்தை

பிஷ்கெக்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் (எஸ்சிஓ) இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வரும் விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பினார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கியது. மாநாடு இன்றும் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, நேற்று பிஷ்கெக் சென்றார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பல நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி முதல் முறையாக பங்கேற்கிறார். இதில், சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்ேவறு நாட்டு தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, மாநாட்டின் இடையே பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது.

அப்போது, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு, ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு, ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டார். நாளை ஜின்பிங் 66வது வயதை எட்டுகிறார். இந்த சந்திப்பில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கும் விவகாரத்தை கிளப்பிய மோடி, ‘‘இந்தியாவை பாதிக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் இது நடக்குமென்று தெரியவில்லை,’’ என கூறியதாக விஜய் கோகலே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கூறுகையில், ‘‘இந்த சந்திப்பு மிக சிறப்பாக நடந்தது. இருதரப்பிலும் பொருளாதார மற்றும் கலாச்சார உறவை மேம்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற உறுதி ஏற்றுள்ளோம். உகான் சந்திப்புக்குப் பிறகு இந்தியா, சீனா உறவில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளது,’’ என்றார். இந்த சந்திப்பின்போது, உலக நாடுகள் மீது அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தக போரை எதிர்கொள்ள, சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்பட வேண்டும் என மோடியிடம் ஜின்பிங் வலியுறுத்தினார்.

மீண்டும் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு

கடந்த 2018ல் சீனாவின் உகானில் மோடி-ஜின்பிங் இடையே நடந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை தொடர்ந்து, இரு தரப்பு உறவில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதே போன்று 2வது முறையாக அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை மேற்கொள்ள பிரதமர் மோடி, ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஜின்பிங் ஏற்றுக் கொண்டார்.

மோடிக்கு புடின் அழைப்பு

சீன அதிபரைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவு குறித்தும், அனைத்து துறையிலும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. வரும் செப்டம்பரில் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக்கில் நடக்க உள்ள கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அதிபர் புடின் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

Tags : Modi ,Pakistani ,conference ,Shanghai ,talks , Pakistan, Modi, Shanghai Conference,
× RELATED தென்கொரியாவில் கொரோனாவால் மேலும் 123...