உலக கோப்பையில் இன்று... மழை, நடுவர்களை சமாளித்து இங்கிலாந்தை வீழ்த்துமா வெஸ்ட் இண்டீஸ்

சவுத்தாம்டன்: நடுவர்களின் தவறான தீர்ப்பு, மழை போன்ற பிரச்னைகளை சமாளித்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை வீழ்த்தும் முனைப்பில் இன்று களம் காண்கிறது. உலக கோப்பையின் 19வது போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த தொடரில் இரண்டு அணிகளும் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கின. இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 104ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. தொடர்ந்து 2வது போட்டியில் பாகிஸ்தானிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில தோல்வி அடைந்தது. அடுத்து  3வது போட்டியில்  வங்கதேசத்தை 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக் கண்டது. ஒருப் போட்டியில் தோற்றிருந்தாலும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 300க்கு மேல் ரன் குவித்த அணியாக இங்கிலாந்து இருக்கிறது. ஒருவீரர் நன்றாக விளையாடா விட்டாலும் மற்றவர்கள் சமாளித்து விடுகின்றனர். ஆனால் பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுத்தாலும் ரன்களை வாரி வழங்கும் வள்ளலாக இருக்கின்றனர்.

ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், லயம் பிளாங்கெட், இயான் மோர்கன் ஆகியோர் இங்கிலாந்தின் வெற்றிக்காக இன்று முனைப்பு காட்டுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் முதல் போட்டியில் 218 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை வெற்றிப் பெற்றது. ஆனால் அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி வீரர் பிராத்வெய்ட் கூறியது போல், வெஸ்ட் இண்டீஸ் அணி, எதிரணியினரை மட்டுமின்றி நடுவர்களையும் சேர்ந்து 13 பேருக்கு எதிராக விளையாட வேண்டி இருந்ததை மறுப்பதற்கில்லை. அதற்கு உதாரணமாக 2வது போட்டி இருந்தது. ஆனால் அடுத்த போட்டியில் மழையும் வெ.இண்டீசுக்கு எதிரணியில் சேர்ந்துக் கொண்டது. அதனால் தென் ஆப்ரிக்காவுடனான  3வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் புள்ளிப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் பின் தங்கி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெ.இண்டீஸ் திறமையான அணியாக இருக்கிறது. அந்த அணியில் அதிரடியாக ரன் குவிக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் இப்படி ரன்களை குவிப்பது அரிதாக இருப்பதுதான் பிரச்னை. அதேபோல் கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் ரன் குவிக்க சிரமப்படுகின்றனர்.  பந்து வீச்சாளர்களும் முதலில் நன்றாக வீசினாலும், கடைசி ஓவர்களின் கஷ்டப்படுத்துகின்றனர்.

இருப்பினும் ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வெய்ட், கிறிஸ் கேல், ஆந்த்ரே ரஸ்ஸல், நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஒஷேன் தாமஸ், ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோர் வெற்றிக்காக இன்று போராடுவார்கள். இந்த 2 அணிகளும் இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளன. அதில் 51 போட்டிகளில் இங்கிலாந்தும், 43 போட்டிகளில் வெ.இண்டீசும்  வெற்றியை ருசித்துள்ளன. மீதி 6 போட்டிகள் கைவிடப்பட்டன. உலக கோப்பை போட்டிகளில் இந்த 2 அணிகளும் அரிதாகவே மோதியுள்ளன. இந்த அணிகள் 1975, 1983, 1996, 1999, 2003, 2015 என 6 உலக கோப்பை போட்டிகளில் நேருக்குநேர் சந்திக்கவேயில்லை. வெ.இண்டீஸ் அணி 1979ம் ஆண்டு உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் 92 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன் பிறகு இங்கிலாந்து 1987ல் 2 முறை, 1992, 2007, 2011ம் ஆண்டுகளில் தலா ஒரு முறை என 5முறை உலக கோப்பை போட்டிகளில் வெ.இண்டீசை வீழ்த்தியுள்ளது. ஆக உலக கோப்பை போட்டிகள் இந்த 2 அணிகளும் மோதிய 6 போட்டிகளில் இங்கிலாந்தின் ஆதிக்கமே அதிகமாக இருந்துள்ளது. அதேநேரத்தில் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ளன. மீதி ஒரு போட்டி கைவிடப்பட்டது. ஆக இப்போது சம பலத்தில் உள்ள 2 அணிகளும் இன்றைய போட்டியில் களம் காண்கின்றன. மழை, நடுவர்களின் தீர்ப்பு ஆகியவற்றை சமாளித்து வெற்றிக்காக 2 அணிகளும் போராட உள்ளன.

Tags : World Cup ,West Indians ,middleman ,England , World Cup, England, West Indies
× RELATED உலகக் கோப்பை சிலம்பப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்