×

வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய தடை காலை 9.30க்கு பணிக்கு வர வேண்டும்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ‘மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியாக காலை 9.30 மணிக்கு பணிக்கு வந்து விட வேண்டும். யாரும் வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்யக் கூடாது,’ என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.
பிரதமர் மோடி 2வது முறையாக பதவி ஏற்ற பிறகு, முதல் முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில், அனைத்து மத்திய அமைச்சர்களும் நிர்வாக பணியில் என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது குறித்து பிரதமர் மோடி அறிவுரைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

* மத்திய அமைச்சர்கள் அனைவரும் தினசரி காலை சரியாக 9.30 மணிக்கு பணிக்கு வருவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். யாரும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது. கீழ் பணியாற்றுபவர்களுக்கு அமைச்சர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இதன் மூலம், அமைச்சகத்தின் பணித்திறனும், உற்பத்தியும் மேம்படும்.
* நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் 40 நாட்களில் அமைச்சர்கள் வெளியூர் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* முதல் முறையாக அமைச்சராகி இருப்பவர்களுடன் மூத்த அமைச்சர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
* கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முக்கிய ஆவணங்களை இணை அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் விவாதித்தே அனைத்து விஷயங்களையும் அமைச்சரவைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
* அமைச்சர்களும், எம்பி.க்களும் தொகுதி மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதில் எந்த பாரபட்சமும் இல்லை. அனைவரும் தங்களின் தொகுதி வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
* அனைத்து அமைச்சகங்களும் அடுத்த 5 ஆண்டு கால பணிக்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். மேலும், முதல் 100 நாட்களில் செயல்படுத்த உள்ள திட்டங்களின் பட்டியலை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மோடி உத்தரவிட்டுள்ளார்.

முதல் முறையல்ல
பணியில் காலம் தவறாமல் இருக்க வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுக்கு வலியுறுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2014ல் முதல் முறையாக அவர் பிரதமர் பதவி ஏற்றதுமே இதே கருத்தை அமைச்சர்களிடம் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் உச்சத்தை பாஜ தொடவில்லை
பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், உட்கட்சி தேர்தல் முடியும் வரை பாஜ தேசிய தலைவராக அமித்ஷாவே நீடிப்பார் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் கூறுகையில், ‘‘மக்களவை தேர்தலில் முதல் முறையாக 303 இடங்களில் வெற்றி பெற்றாலும், பாஜ இன்னும் தனது உச்சகட்ட வளர்ச்சியை எட்டவில்லை என கூட்டத்தில் அமித் ஷா குறிப்பிட்டார். புதிய பிராந்தியத்திலும், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பாஜ.வை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்,’’ என்றார்.



Tags : Narendra Modi ,ministers ,home , Banned , Modi , ministers
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...