×

திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படும் கார், லாரிகள்: பயணிகள் அவதி

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்குள் நிறுத்தப்படும் தனியார் கார், லாரி, ஜீப் போன்ற வாகனங்களால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திருமங்கலம் டவுன் பஸ் ஸ்டாண்ட் மதுரை ரோட்டில் அமைந்துள்ளது. சுமார் 20 பஸ்கள் மட்டுமே நிற்க இடம் உள்ள இந்த பஸ் ஸ்டாண்டில் தற்போது நுாற்றுக்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. தேனி, போடி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வெளியூர் பஸ்களும் வந்து செல்கின்றன. இதனால் கடும் இடநெருக்கடியில் திருமங்கலம் டவுன் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. காலை 7 முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிரம்பி வழிவதால் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் திணறி வருகின்றன. சமீபகாலமாக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்குள் ஜீப், லாரி, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து கொள்கின்றன.

இதனால் பஸ்கள் நிற்க இடமில்லாமல் அவசரகதியில் மீண்டும் கிளப்பி செல்லும் நிலை உண்டாகி வருகிறது. இது பஸ்களுக்கு காத்திருக்கும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது. நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் தனியார் வாகனங்கள் எப்படி நிறுத்தப்படுகின்றன என்பது புரியாத புதிராகவே உள்ளது. இவற்றை கண்காணிக்க வேண்டிய போக்குவரத்து போலீசார் மவுனமாக உள்ளனர் பொதுமக்கள், பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் தனியார் வாகனங்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stand ,passengers ,Tirumangalam , Tirumangalam, bus stand, car, lorries
× RELATED குப்பை கிடங்காக மாறிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: பயணிகள் கடும் அவதி