×

திருமங்கலம்-விருதுநகர் ரோட்டில் சேதமடைந்த ஆறுகண்பாலம் வாகன ஓட்டிகள் அச்சம்

திருமங்கலம்: விருதுநகர் மெயின் ரோட்டில் குண்டாற்றின் மீது அமைந்துள்ள ஆறுகண்பாலம் சேதமடைந்து பலவீனமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்aசமடைந்துள்ளனர். திருமங்கலம் நகரிலிருந்து விருதுநகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது ஆறுகண்பாலம். நகரின் வழியாக செல்லும் குண்டாறு பாலத்தின் மீது அமைந்துள்ள இந்த குறுகலான பாலம்தான் திருமங்கலம் நகரையும், தென்மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய பாலமாக திகழ்கிறது.
மழைக்காலங்களில் குண்டாற்றில் ஓடும் தண்ணீர் பாலத்தை கடந்து செல்ல ஆறுகண் கொண்டு அமைக்கப்பட்டதால் இது ஆறுகண் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த பாலத்தை கடந்தவுடன் தான் விருதுநகர் மற்றும் ராஜபாளையம் சாலைகள் பிரிக்கின்றன. திருமங்கலத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் உரிய பராமரிப்பு இன்றி சிதைவடைந்து காணப்படுகிறது. பாலத்தின் உள்புறத்தில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து காரைகள் தெரிகின்றன.

பக்கவாட்டு சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்து பாலத்தை பலவீனமாக்கி வருகின்றன. பாலத்தின் சாலையும் பெயர்ந்து ஆங்காங்கே பல்லை காட்டுகின்றன. இதனால் ஆறுகண் பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என திருமங்கலம் நகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் கேட்ட போது, ‘பாலத்தை இடித்துவிட்டு நான்குவழிப்பாதை பாலமாக அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்தவுடன் நான்குவழிச்சாலை துவங்குகிறது. விரைவில் ராஜபாளையம் ரோடும் நான்குவழிச்சாலையாக மாற உள்ளதால் தற்போதுள்ள ஆறுகண்பாலத்தை அகற்றிவிட்டு புதியாக நான்குவழிச்சாலை பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : motorists ,Tirumangalam-Virudhunar ,road , Tirumangalam-Virudhunagar, damaged riverfront
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி