×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா நாளை துவக்கம்: 3 நாள் நடைபெறுகிறது

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்பத்திருவிழா நாளை துவங்கி 3 நாள் நடைபெறுகிறது. திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும், பின்னர்  கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி நடைபெற்ற நிலையில் தெப்ப திருவிழா நாளை(14ம் தேதி) துவங்கி வரும்  16ம் தேதி வரை நடைபெறுகிறது. கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட குளத்தில் பல வண்ண விளக்குகளை கொண்டு  அலங்கரிக்கப்பட்ட தெப்பம் இரவையும் பகலாக்கும் வகையில் குளத்தை சுற்றி வருவது பக்தர்களுக்கு கண்கொள்ள காட்சியாக இருக்கும்.

அதன்படி தெப்பம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது.  ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் மூலம் மொத்தம் 2 அடுக்குகளுக்கு 432 பேரல்களை கொண்டு 7 அடி உயரத்தில் சுமார் 600 பேர் அமரும் வகையில் தெப்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  நாள் ஒன்றுக்கு 3 சுற்றுகள் வீதம் இசை கச்சேரிகளை கொண்டு  நடைபெறும் இந்த தெப்ப திருவிழா தினந்தோறும் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு  9 மணி வரையிலும், இரவு 10 மணிக்கு துவங்கி நள்ளிரவு 1 மணி வரையிலும், 2 மணிக்கு துவங்கி அதிகாலை 5 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக சுற்றி வரும். 16ம் தேதி தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று மாலை 6மணிக்கு தெப்பம் வெள்ளோட்டம் நடைபெறுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் செயல் அலுவலர் கவிதா தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Tags : Tiruvarur Thiagaraja Swamy Temple , Thiruvarur, Thiagaraja Swamy Temple, Thappathirai festival
× RELATED தியாகராஜ சுவாமி கோயிலின்...