கடலூர் வனத்துறைக்கு சொந்தமான சவுக்குத் தோப்பில் பயங்கர தீ விபத்து: அணைக்க முடியாமல் தடுமாறும் தீயணைப்புப்படையினர்

கடலூர்: கடலூர் கடற்கரையையொட்டி தேவனாம்பட்டினம், சோனங்குப்பம் மீனவர் கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான 50 ஏக்கர் சவுக்கு தோப்பு உள்ளது. பணம் வைத்து சூதாடும் கும்பல்களும் மது அருந்துபவர்களும் இந்த தோப்பை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கிராம மக்கள் இயற்கை உபாதைகளை சரி செய்யும் இடமாகவும் பயன்படுத்தப் படுகிறது. அப்போது அவர்கள் தூக்கி எறியும் பீடி சிகரெட் துண்டுகளால் தோப்பில் உள்ள சருகுகள் தீப்பிடித்து அடிக்கடி தீ விபத்துகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அடிக்கடி சோதனைகள் நடத்தி சூதாடும் கும்பல்கள், மதுபான கும்பல்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை சவுக்குத்தோப்பு தீப்பிடித்து எரிந்தது .தகவல் அறிந்த கடலூர் தீயணைப்புத்துறையினர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். நேற்றிரவு 9 மணியளவில் மீண்டும் சோனங் குப்பத்தை ஒட்டிய  பகுதியில் சவுக்கைமரங்கள் தீப்பிடித்து எரிந்தன.

அதனை அடுத்து மீண்டும் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் தீயை அணைக்க போராடினர். சவுக்குத் தோப்பில் நடுப்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததால் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்ல முடியவில்லை. அதனைத் தொடர்ந்து சவுக்குத் தோப்புக்குள் நடந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் வாளிகள் மூலம் தண்ணீர் எடுத்துச்சென்று ஓரளவிற்கு தீயை அணைத்தனர். ஆனால் முழுமையாக அணைக்க முடியவில்லை. அதனை அடுத்து, இன்று காலை தீ அணைப்பு முயற்சிகளை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.    இந்நிலையில் காற்று பலமாக வீசுவதால் தோப்பின்  மையப் பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சத்தின் பிடியில் உள்ளனர். எனவே தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fire ,forest department ,Cuddalore , Cuddalore, Forest Department
× RELATED பல்வேறு துறைகளில் பெரும் சாதனையாளராக...