×

தொடரும் கனமழை எதிரொலி: குமரியில் ரப்பர் பால் வெட்டும் பணி முடங்கியது... நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

குலசேகரம்: உலகிலேயே அதிக தரம் வாய்ந்த ரப்பர் குமரியில்தான் உற்பத்தியாகிறது. ரப்பர் சம்பந்தமான பால் வடித்தல் மற்றும் அது சம்பந்தமான வேலைகளில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். திருவட்டார், கல்குளம், விளவங்கோடு, தோவாளை ஆகிய தாலுக்காக்களில் ரப்பர் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு அரசு ரப்பர் கழகம் மற்றும் தனியார் தோட்டங்கள், சிறு குறு தோட்டங்கள் என ரப்பர் பரவலாக உள்ளது. அந்த வகையில் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரில் ரப்பர் விவசாயம் நடைபெறுகிறது. ரப்பர் பால் வடிக்கும் தொழில் ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்திற்கு பிறகு மே மாதத்தில் துவங்கும். குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 முதல் 250 டன் வரை உற்பத்தியாகிறது. மே மாதத்தில் கோடை மழை பெய்த பின்னர் ரப்பர் பால் வெட்டும் பணி துவங்கும். இந்த ஆண்டு மே மாதத்தில் கோடை மழை பெரிய அளவில் இல்லை. இதனால் பொரும்பாலான இடங்களில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் தள்ளிப்போனது.

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மலையோர பகுதிகள் மற்றும் மலை பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியதை அடுத்து ரப்பர் பால்வெட்டும் பணியும் விறுவிறுப்படைந்தது. ரப்பர் பால் வெட்டும் பணி தொடங்கிய சில நாட்களிலேயே தென்மேற்கு பருவமழையும் பெய்ய தொடங்கி, கடந்த 5 நாட்களாக அடைமழையாக பெய்து வருகிறது. ரப்பர் அதிகம் காணப்படும் மலை பகுதி, மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ரப்பர் பால் வெட்டு பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு பால் வெட்டு நிறுத்தும் சீசனில் தரம்பிரிக்காத ரப்பர் கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.110 வரை விலை நிலவி வந்தது. தற்போது ரப்பர் விலை படிப்படியாக உயர்ந்து தரம்பிரிக்காத லாட்டுரக ரப்பர் கிலோ ஒன்றுக்கு ரூ.130.50 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

சில ஆண்டுகளாக ரப்பர் விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில் ரப்பர் பால்வெட்டு துவங்கிய இந்த காலகட்டத்தில் ரப்பர் விலை உயர்ந்து வருவது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது .முதல் தரமான ஆர்எஸ்எஸ்4 கிலோ ஒன்றுக்கு ரூ.148 என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக ரப்பர் தொழில் முடங்கியுள்ளது. பால் வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தற்போதைய மழை பொழிவு வரும் நாட்களில் ரப்பர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உள்ளது.

நிவாரணம் கிடைக்குமா?
குமரி மாவட்டத்தில் பால் வெட்டுதல் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்பவர்களை தொழில் சங்கங்களிடம் உதவியுடன் கணக்கீடு செய்ய வேண்டும். மழை காலங்களில் ரப்பர் பால் வெட்டும் தொழில் முடங்குவதால் பால் வெட்டும் தொழிலையே தொடர்ச்சியாக செய்து வரும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் வருவாய் இன்றி தவிக்கின்றனர். சில பெரிய தனியார் ரப்பர் எஸ்டேட்டுகளில் மழை காலங்களில் ரப்பர் பால்வெட்டும் தொழில் நடக்காத நேரத்தில் தொழிலாளர்களுக்கு அவர்களின் தேவையை உணர்ந்து குறைந்த பட்ச நிதி நிவாரணமாக வழங்கப்படுகிறது. ஆனால் அரசு தோட்டங்கள் மற்றும் பெரும்பாலான தோட்டங்களில் இத்தகைய நிலைபாடு இல்லை. எனவே மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலங்களில் அரசு உதவிகள் வழங்குவது போன்று மழை காலங்களில் ரப்பர் பா்ல் வெட்டும் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மரத்திற்கு பிளாஸ்டிக் குடை
ரப்பர் பால் வெட்டும் பணி ஒவ்வொரு ஆண்டு மே மாதம் கோடை மழை காலத்தில் துவங்கும். அதன்பின்னர் தென்மேற்கு பருவமழை காலங்களில் 100 சதவீதம் பால் வடிக்கும் பணி எல்லா தோட்டங்களிலும் இருக்கும். இந்த காலங்கட்டங்களில் மழை காலங்கள் அவ்வப்போது தொழில்கள் முடங்குவது உண்டு. பெரிய ரப்பர் தோட்டங்களில் சிறிய மழை காலங்களில் பால் வெட்டு தடைபடாமல் இருக்க, பால்வடிக்கும் பகுதியில் சிறிது உயரத்தில் பிளாஸ்டிக் கவரால் குடைபோன்று அமைக்கப்படும் இதனால் மரம் மழையால் நனையாத வண்ணம் காணப்படும். இதன்காரணமாக பால்வெட்டு பாதிப்பு ஏற்படாது. ரப்பர் நவம்பர், டிசம்பர் நிலவும் குளிர்ந்த கால நிலை ரப்பருக்கு உகந்ததாக இருப்பதால் இந்த கால கட்டத்தில் உற்பத்தி அதிகரிக்கும். சில நேரங்களில் சில ரப்பர் தோட்டங்களில் இந்த உற்பத்தி இரட்டிப்பாகவும் செய்யும். அதன்பின்னர் ஜனவரி இறுதி வாரம் பிப்ரவரி மாதங்களில் இலைகள் உதிர தொடங்கியதும் பால் வெட்டும் பணி நிறுத்தப்படும்.

தேன் உற்பத்தி அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் ரப்பருக்கு அடுத்தப்படியாக தேன் உற்பத்தி அதிகமாக உள்ளது. தேனி வளர்த்தல், தேன் உற்பத்தி போன்றவற்றை அடிப்படையாக கொண்டு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குமரி மாவட்டத்தில் இந்த ெதாழிலை செய்து வருகின்றனர். பெரும்பாலான தேன் பெட்டிகள் ரப்பர் தோட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரப்பர் இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்விடும் காலங்களில் தேன் உற்பத்தி சீசன் துவங்கிறது. இங்கு ரப்பர் தோட்டங்களில் அதிகம் இருப்பது அதிக அளவு தேன் உற்பத்தியை தருகிறது.

Tags : shrine , Heavy rain, milk, rubber milk, cutting work, stalled
× RELATED அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது