வரும் ஆகஸ்ட் மாதத்தில் டாஸ்மாக்கில் இளநிலை உதவியாளர் பணிக்கு தேர்வு: பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களுக்கு வாய்ப்பு

மதுரை: டாஸ்மாக் அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு, வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. ஏற்கனவே டாஸ்மாக்கில் பணிபுரியும் பட்டதாரிகள் மட்டுமே இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் சூபர்வைசர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மேலாளர் அலுவலகம், முதுநிலை மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணியாற்ற வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியாற்றி வருகின்றனர்.

கடந்த 2003ம் ஆண்டில் இருந்து இந்த அலுவலகங்களில் பணியாற்றிய பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். இந்த அலுவலகங்களில் காலிப்பணியிடங்கள் கடந்த 16 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த அலுவலகங்களில் தமிழகம் முழுவதும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் சுமார் 500க்கும் மேல் காலியாக உள்ளன. தற்போது இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப சென்னை நிர்வாக இயக்குனர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் சூபர்வைசர், விற்பனையாளர் என பணியாற்றி வருபவர்களில், பட்டதாரிகளை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து, இப்பணியிடங்களை நிரப்ப டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என சென்னை டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது. தேர்வு நடத்தப்படும் இடத்தை தேர்வு செய்து அனுப்ப, அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் ஒன்றிய மாநிலத் தலைவர் சரவணன் கூறுகையில், ‘‘முதுநிலை மண்டல அலுவலகம், மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்ைக வைத்து வந்தோம். 16 ஆண்டுகளுக்கு பின்னர், எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பட்டதாரி ஊழியர்களை தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக பணிநியமனம் செய்ய, சென்னை நிர்வாக இயக்குனர் அலுவலகம் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

Tags : graduates , Choose from August, Taskmack, PhD Assistant, Work
× RELATED ஆழ்வார்குறிச்சி கல்லூரியில் போட்டி...