×

வெறுப்பு உண்டாக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது: அந்நாட்டு ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தல்

இஸ்லமாபாத்: மீம் போன்ற விஷயங்களை ஒளிபரப்பும்போது ஊடகங்கள் கவனத்துடன் செயல்படவேண்டும் என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அந்நாட்டு  அரசு அறிவுறுத்தியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்திய அணி  இரு அணிகளுடன் மோதி வெற்றி பெற்றது. இன்று நடைபெற உள்ள 3-வது போட்டி மழை காரணமாக தாமதம் ஆகி வருகிறது. தொடர்ந்து, வரும்  16ம் தேதி இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான விளம்பரங்களை பாகிஸ்தான் ஊடகம் ஒளிபரப்பியது. இந்த  விளம்பரம் மாபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனைப் போல மீசை வைத்துக் கொண்டு ஒருவர் வருகிறார். அப்போது, இந்தியா  -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்தியாவின் உத்தி என்ன? என்று அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அந்த நபர்,  ‘இதுகுறித்து உங்களிடம் நான் கூற முடியாது. மன்னிக்கவும்’ என்று பதில் கூறுகிறார்.

அவர் பேசும்போது கையில் டீ கப் ஒன்றும் உள்ளது. மேலும் அவர் இந்திய அணியின் நீல நிற ஜெர்சி அணிந்துள்ளார். ஏற்கனவே, விங் கமெண்டர்  அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டபோது அவர் டீ அருந்துவது போன்ற வீடியோ வைரலாக பரவியது. இதனை மையப்படுத்தியே இப்போது இந்த  விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ குறித்து இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டவருமான சானியா  மிர்ஸா தனது டிவிட்டர் பதிவில் எரிச்சலூட்டும் விளம்பரங்கள் எல்லையின் இருபுறம் இருந்தும் வெளியிடப்படுவதாக தெரிவித்துள்ளார். உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருப்பதாகவும் அபத்தமான முறையில் எவரும் விளம்பரப்படுத்தத்  தேவையிலை என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறிப்பிட்ட நபர்களின் மேல் வெறுப்பு உண்டாக்கும் வகையிலோ அரசியல் கட்சிகளை கிண்டல் செய்தோ அர்த்தமற்ற நையாண்டி  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடாது என பாகிஸ்தான் ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : government ,Pakistani , Hate, show, media, and the Pakistan government
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி