×

திருவள்ளூர் நகரில் ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் மாணவர்களை ஏற்றி செல்லும் அவலம்: போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரில் போக்குவரத்து விதிகளை மீறி, அதிகளவில் ஆபத்தான முறையில் பள்ளி சிறுவர்களை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளை கட்டுப்படுத்த நகர போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர். ஷேர் ஆட்டோக்களில் சாதாரண ஆட்டோக்களை போல் 3 பேர் தான் பயணிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், இந்த ஆட்டோக்களில் உள்புறம் 8 பேர், டிரைவரின் இருபுறமும், 2 பேர் என டிரைவருடன் சேர்த்து, 11 பேர் பயணிக்கின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துக்குள்ளாகும் போது, உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. அதிக பாரத்தை ஏற்றி செல்லும்போது, திருப்பங்களில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் உண்டு.
இவர்கள், தங்கள் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லும் பணியை மேற்கொள்கின்றனர்.

இதில், சாதாரணமாக பயணிகள் 10 பேரை ஏற்றினால், பள்ளிக் குழந்தைகளை, 15 பேர் வரை ஏற்றி, புளி மூட்டை போல் அடைத்து செல்கின்றனர். சாதாரண ஆட்டோக்களிலும் இதுபோன்று, பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஏற்றிச் செல்வதும் உண்டு. ஷேர் ஆட்டோக்களில், பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு, குறுகலான சாலைகளில் கூட தங்கள் இஷ்டத்திற்கு ஓட்டுகின்றனர். இவ்வாறு விதிகளை மீறி அதிகளவில் பள்ளி சிறுவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களை போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே, அதிக பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோக்களை பிடித்து அபராதம் விதித்து, டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை என்ற நிலை மாறி, வருமுன் காக்கும் நடவடிக்கையாக இதை செய்ய வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : city ,Tiruvallur , Auto, student, police action
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...