×

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: இயக்குநர் பா.ரஞ்சித்தை 19ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற கிளை தடை

மதுரை: ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சை விதமாக பேசிய வழக்கில் இயக்குநர் பா.ரஞ்சித்தை 19ம் தேதி வரை கைது செய்ய உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது.  கடந்த 5ம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்போது மன்னர் ராஜராஜ சோழன் குறித்து கடுமையாக விமர்சித்தார். ராஜராஜ சோழன் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட நிலம் பறிக்கப்பட்டது என பேசியிருந்தார். மேலும் அவரது காலம் இருண்ட காலம் எனக் கூறியிருந்தார். சாதி ரீதியான ஒடுக்குமுறைகள் அவரது ஆட்சி காலத்தில் தான் தொடங்கியது என்ற குற்றசாட்டை ரஞ்சித் முன்வைத்திருந்தார். மேலும் தான் ஒரு ஜாதி வெறியன் என்றும் அறிவித்துக்கொண்ட பா.ரஞ்சித், மாட்டை நீங்கள் கடவுளாக கும்பிட்டால், அந்த கடவுளையே சாப்பிடுபவன் நான் என்றும் காரசாரமாக பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசிவரும் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதேபோல், தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் இயக்குநர் ரஞ்சித் மீது சர்ச்சைக்குரிய வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல்நிலையத்திலும் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சிய இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது மக்கள் போற்றும் மன்னரை பற்றி பேசியது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஞ்சித் தனது பேச்சு எந்த சமூகத்திலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் இல்லை என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விசாரித்த நீதிபதி புகழ் பெற்ற மன்னர் ராஜராஜ சோழன் குறித்து பேசியதை தவிர்த்திருக்க வேண்டும், அரசியல் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மன்னர் குறித்து பேசியது தவறு என்றும், ராஜராஜ சோழன் குறித்து பேசியதை தவிர்த்திருக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். இதையடுத்து, இயக்குநர் ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரஞ்சித் மீது புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் அவரிடம் விசாரிக்க வேண்டும் என்பதால் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, வழக்கு தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்யமாட்டோம் என அரசு தரப்பு உத்தரவாதத்தை பெற்ற நீதிமனறம் வரும் 19ம் தேதி வரை ரஞ்சித்தை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.



Tags : Raja Raja Chowdhury ,Ranjith ,arrest ,speech ,Supreme Court , Raja Raja Cholan, Director P. Ranjith, Arrested, High Court Branch
× RELATED கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை