×

கீழடியில் 5ம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளது. அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மற்றும் அமைச்சர் பாஸ்கர் ஆகியோர் இந்த பணிகளை தொடங்கி வைத்தனர். மழைக்காலம் தொடங்கும் வரை இந்த பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் என்ற இடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக 4 கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண்பானை ஓடுகள், ஆயுதங்கள் உள்ளிட்ட 6,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016ம் ஆண்டு 2வது கட்டமாகவும், 2017ம் ஆண்டு 3வது கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது.

இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600 க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து 4வது முறையும் ஆய்வு நடந்தது. முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 13,638 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளது. மத்திய அரசிடமும் ரூ.2 கோடி கேட்கப்பட்டு உள்ளது. 4 அகழ்வாராய்ச்சிகளில் 3 அகழ்வாராய்ச்சிகள் மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்டது. இதையடுத்து 4-வது ஆகழ்வாராய்ச்சி தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட நிலையில், 5ம் கட்ட ஆகழ்வாராய்ச்சி இன்று கீழடியில் துவங்கியுள்ளது. முன்னதாக இந்த அகழ்வாராய்ச்சி பணிக்காக தமிழக அரசு ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தது. இதையடுத்து இந்த பணிக்காக தற்போது 2 தனியாரிடம் இருந்து இடங்கள் வாங்கப்பட்டுள்ளன. எனவே 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆராய்ச்சி பணிகள் துவங்கும் என தெரியவந்துள்ளது.

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேட்டி:

அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணியை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தொடங்கி வைத்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 13,638 பொருட்களும் அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும், பள்ளிக் குழந்தைகளை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்படும் என்று கூறினார்.

Tags : P. Pandiarajan ,phase , Bottom, 5th phase of excavation, work, beginning
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...