×

ரகசியங்களை ஹேக் செய்த விவகாரம்: விக்கி லீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்

லண்டன்: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கணினி தரவுகளை ஹேக் செய்த புகாரில் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகம், கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜூலியன் அசாஞ்சேவுக்கு 2012-ம் ஆண்டு அடைக்கலம் அளித்திருந்தது. 7 ஆண்டுகள் கழித்து கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி அவருக்கு அளித்த பாதுகாப்பை தூதரகம் விலக்கிக்கொண்டது. அதேசமயம், ஸ்வீடனில் ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் லண்டன் போலீசார் கைது செய்தனர்.

47 வயதான ஜூலியான் அசாஞ்சே  அமெரிக்கா தொடர்பான பலதரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார். மேலும், அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீராங்கனை செல்சியா மானிங் உடன் சேர்ந்து பாதுகாப்பு துறையின் கணினியை ஹேக் செய்ய முற்பட்டது போன்ற 18 வகையான குற்றச்சாட்டுகள் விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சே மீது உள்ளன. அதேபோல, உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டும் அலெக்சாண்ட்ரியா மத்திய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரமாக முயற்சித்து வந்தது. அந்த சமயத்தில் தான் லண்டன் ஈகுவடார் தூதரகம் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக்கொண்டதையடுத்து, லண்டன் அரசு அவரை கைது செய்து வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. இந்த நிலையில், இவர் மீது அதிக வழக்குகள் உள்ள காரணத்தால் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டர்ம்புக்கு ஆதரவாக ஹிலாரி கிளிண்டனின் இமெயில் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டதன் பின்னணியில் ஜூலியன் அசாஞ்சே இருந்ததாக அமெரிக்கா அசாஞ்சே மீது  குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Assange ,government ,UK ,US ,WikiLeaks , Julian Assange, Deportation, USA, UK, Approved
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்