ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; கிர்கிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிஷ்கேக்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் சென்றடைந்தார். இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் இன்றும்,  நாளையும் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பாகிஸ்தானிடம் இந்தியா அனுமதி:
இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் விமானம், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்திக் கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் அனுமதி கோரியது. பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு தடை விதித்துள்ளது. இதனால், சிறப்பு அனுமதி பெற்றே இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த  முடியும். கிர்கிஸ்தானுக்கு பாகிஸ்தான் வழியாக சென்றால் 4 மணி நேரத்தில் சென்று விடலாம். மாற்று பாதையில் சென்றால், பல்வேறு நாடுகளை சுற்றிக் கொண்டு 8 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதனாலேயே  பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கப்பட்டது.

பாகிஸ்தான் அனுமதி;
இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான், பிரதமர் மோடியின் விமானத்திற்கு சிறப்பு அனுமதி வழங்குவதாக நேற்று முன்தினம் தெரிவித்தது. இது கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு என பாகிஸ்தான் கூறினாலும், இதன் பிறகாவது  மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இந்தியா முன்வர வேண்டுமென அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, பாகிஸ்தானின் அனுமதியை கடைசி நேரத்தில் புறக்கணித்தார். பின்னர் பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். பிரதமரின் விமானம் ஓமன், ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக  பிற்பகல் 2 மணியளவில் பிஷ்கேக் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அரசின் சார்பில் இனிமம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று மாலை 4.50 மணியளவில் சீன அதிபர் ஜின்பிங்கையும், 5.30 மணியளவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் இறுதியாக இரவு 10 மணியளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் மோடி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. எஸ்சிஓ மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்க உள்ளார். ஆனால், மோடி-இம்ரான் சந்திப்பு குறித்து எந்த திட்டமும் இல்லை என இந்தியா தரப்பில் திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.

Tags : Shanghai Cooperation Conference ,Modi ,Kyrgyzstan , Shanghai Cooperation Conference, Kyrgyzstan, Prime Minister Modi
× RELATED தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலை