×

திருவாரூர்- காரைக்குடி அகலபாதையில் கேட் கீப்பர்களை பணியமர்த்த வேண்டும்

* மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தல்

மன்னார்குடி : திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் பயண நேரத்தை குறைக்கவும், பாது காப்பை உறுதிபடுத்தவும் தேவையான எண்ணிக்கையில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என மாவட்ட ரயில் உபயோகிப்போர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ரயில்வே அமைச்சர் பியுஸ் கோயலுக்கு திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க செயலாளர் பாஸ்கரன், அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
பத்தாண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள திருவாரூர் -முத்துப்பேட்டை அகல ரயில் பாதையில் தேவையான எண்ணிக்கைகளில் கேட் கீப்பர்களை உடனடியாக பணியமர்த்தி திருவாரூர்- காரைக்குடி இடையிலான பயணநேரத்தை வெகுவாக குறைக்க வேண்டும். காரைக்குடியில் இருந்து சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.

திருப்பதி - மன்னார்குடி, மன்னார்குடி - திருப்பதி (17407/408) ரயிலை தினமும் இயக்க வேண்டும். சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாக தினமும் அந்தோதயா ரயில் இயக்க வேண்டும். தினம்தோறும் அதிகாலையில் காரைக்கால் - பெங்களூர் துரித ரயில் திருவாரூர் வந்த பிறகு திருவாரூரில் இருந்து திருச்சிக்கு ஒரு ரயில் இயக்க வேண்டும். நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் அதிக நேரம் மூடப்படுவதை குறைக்கும் வண்ணம் செம்மொழி விரைவு ரயிலுக்கு திருவாரூரில் இன்ஜின் மாற்றம் செய்ய வேண்டும்.

விழுப்புரத்தில் இருந்து தினம்தோறும் மயிலாடுதுறை வரை ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 3 பயணிகள் ரயில்களில் ஒன்றை திருவாரூர் வழியாக காரைக்குடி வரையிலும், மற்றொன்றை திருவாரூர் வழி வேளாங்கண்ணி வரையிலும், மற்றொன்றை திருவாரூர் வரையும் நீட்டிக்க வேண்டும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு முதல் ரயில் காலை 8-15 மணிக்கும், அடுத்த ரயில் மதியம் 2-30 மணிக்கும் உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் புதிதாக மேலும் ஒரு ரயில் திருச்சி வரை இயக்கப்பட வேண்டும்.

அதிகாலையில் மன்னார்குடி செல்லும் செல்லும் மன்னை விரைவு ரயிலும், காரைக்கால் செல்லும் கம்பன் விரைவு ரயிலும் மாலை வரை எந்த பயனும் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மற்றும் பெட்டிகளைக் கொண்டு விழுப்புரம் மற்றும் திருச்சி வரை விரைவு ரயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுந்த காரணமின்றி தரம் இறக்கப்பட்டுள்ள முத்துப்பேட்டை ரயில் நிலையத்தை முன்பு இருந்தது போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவாரூர் ரயில் நிலையத்தின் முகப்பு அழகுற மாற்றி அமைப்பதுடன் அனைத்து நடைமேடைகளிலும் கழிவறை வசதி, போதுமான இருக்கை வசதிகள், ஏடிஎம் வசதி பாதுகாப்பான இருசக்கர வாகன காப்பகம், செய்ய நடவடிக்கை வேண்டும் ரோட்டில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் எல்லோரும் பார்க்கக் கூடிய விதத்தில் அரைவட்டத்தில் ஆன திருவாரூர் சந்திப்பு என்ற பெயர் பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Ketkeepers ,area ,Tiruvarur ,Karaikudi , appoint ,gate keepers,Thiruvarur,karaikudi ,broad gauge
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...