×

கூத்தாநல்லூர் நகராட்சிக்கு குப்பை சேகரிக்க 12 பேட்டரி வாகனங்கள்

மன்னார்குடி : கூத்தாநல்லூர் நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவீன முறையில் குப்பைகளை சேகரிக்க ரூ 21.60 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்கள் மற்றும் 72 குப்பை தொட்டிகள் வாங்கப் பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சியில் 24 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தினம் தோறும் 2 டன் குப்பைகள் நகராட்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நகராட்சி பகுதிகளில் நவீனமுறையில் குப்பைகளை சேகரிக்க ரூ 21.60 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்கள் மற்றும் 72 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ராஜகோபால் கூறுகை யில், திடக்கழிவு மேலாண்மைக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கூத்தா நல்லூர் நகராட்சியில் நவீன முறையில் குப்பைகளை சேகரிக்க பேட்டரியால் இயங்கக்கூடிய 12 புதிய வாகனங்களும், தினம்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் வாரியாக பிரிக்க ஏதுவாக 72 புதிய குப்பை தொட்டிகள் ரூ 21.60 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் மூலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் அபாயகரமான கழிவுகள் என தனித்தனியாக பிரித்து வாங்கப்பட உள்ளது. மேலும் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் மக்கும் குப்பைகளை பிரித்து அவற்றை உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முக்கியமாக குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை மற்றும் அபாயகர மான கழிவுகளாக தனியே பிரித்து தூய்மை பணியாளர்களிடம் மக்கள் வழங்க வேண்டும். மேலும் கூடுதலாக ரூ 11 லட்சம் மதிப்பில் 2 புதிய சிறிய வாகனங்களும் விரைவில் வாங்கப்பட உள்ளன.

மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், தோட்ட கழிவுகள், தேங்காய் ஓடுகள், வீணான உணவு பொருட்கள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை பச்சை நிற கூடையிலும், மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் கவர், அனைத்து வகையான உலோக பொருட்கள், ரப்பர் பொருட் கள் உள்ளிட்டவைகளை நீல நிற கூடைகளிலும், அபாயகரமான கழிவுகளான பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள், குழந்தைகளுக்கு போடக்கூடிய டையப்பர்கள், காலியான மருந்து டப்பாக்கள், பேன்டேஜ் உள்ளிட்டவைகளை கருப்பு நிற கூடையிலும் போட வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையர் ராஜகோபால் கூறினார்.

Tags : municipality ,Koothanallur , Battery Vehicles,sewage ,koothanallur , mannargudi
× RELATED சிவகாசி நகராட்சி பகுதியில் சாலையில்...