×

தினகரன் செய்தி எதிரொலி ஸ்டாம்ப் போதை கலாசாரத்தை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரி : தினகரன் செய்தி எதிரொலியாக புதுவையில் ஸ்டாம்ப் கலாசாரத்தை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போதைக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகி வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. விஷேசங்கள் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் என எது வந்தாலும், அங்கு முதன்மை பொருளாக சரக்கு மற்றும் போதை பொருட்கள் உள்ளது. இதனால், சமுதாயம் சீரழிந்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், அவையாவும் கானல்நீராகவே உள்ளது.

குறிப்பாக புதுச்சேரியில் போதை கலாசாரம் அதிகரித்துள்ளது. புதுப்புது மதுபான வகைகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் விட அதை விட கூடுதலான போதை தரக்கூடிய போதை பொருட்களின் பயன்பாடும் புதுவையில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அவற்றில் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. கிக் வேண்டும் என்பதற்காக புதுப்புது வகையான போதை பொருட்களை தயாரித்து அவற்றை சிலர் விற்பனை செய்து
வருகின்றனர்.  

 அவற்றை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பது குடிமகன்களுக்கு வசதியாக உள்ளது. எல்எஸ்டி எனும் ஹைடெக் அளவிலான ஸ்டாம்ப் பேப்பர் வடிவிலான போதை பொருட்களின் வரவு தற்போது அதிகரித்துள்ளது. ஏழை எளியவர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் என அனைவரையும் பாடாய்படுத்தி வருகிறது இந்த போதை பொருட்கள். இதில் கொடுமையான விஷயம் என்வென்றால் சில பெண்களும் போதை பொருட்களுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து நாசமாகி வருகின்றனர். போதை பொருட்களின் பயன்பாடு காரணமாக கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சமீப காலமாக புதுச்சேரி மாநிலத்தை ஸ்டாம்ப் எனும் போதை பொருள் உலுக்கி வருகிறது. பார்ட்டிகளில் தாராளமாக கிடைக்கிறது.

இவற்றை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினம் என்பதால் இவற்றின் வரவும், பயன்பாடும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த ஸ்டாம்ப் எனப்படும் போதை பொருளால் புதுச்சேரி படும்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள், அவற்றின் தன்மை, எவ்வாறு கண்டுபிடிக்கலாம் போன்றவை குறித்து விரிவான கட்டுரை கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது.  இதையடுத்து, இதன் எதிரொலியாக அவற்றை கண்டுபிடிப்பது, தடுப்பது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை தலைமை அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

தலைமை செயலர் அஸ்வனிகுமார், டிஜிபி சுந்தரி நந்தா ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் ஐஜி சுரேந்தர் சிங் யாதவ், சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா, மகேஷ்குமார் பர்ன்வால் மற்றும் எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சட்ட, ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா வழக்குகள், வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரியில் விற்கப்படும் ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருள் மற்றும் வேறு விதமான போதை பொருட்களான ஹெராயின், பிரவுன் சுகர் உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 மேலும் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் நீதிமன்றமும், காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். காவல்துறை மீதான எவ்வித புகார்களுக்கும் இடம் தராமல் பணியாற்ற வேண்டும். குற்றச்சம்பவங்களான செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்டவற்றை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

Tags : Narayanasamy , Stamp Addictive,Puduchery , narayansamy,officials
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...