×

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கும் நிலையில் குழாய் உடைப்பால் வீணாகும் காவிரி குடிநீர்

*வேதனையில் ராமேஸ்வரம் மக்கள்

ராமேஸ்வரம் :  ராமேஸ்வரம் இந்திய கடற்படை முகாமிற்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் வெளியேறி துறைமுக சாலையில் குளம்போல் தேங்கியது. மண்டபத்தில் இருந்து பாம்பன் சாலைப்பாலத்தின் வழியாக குழாய் மூலம் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் பின்பகுதியில் அமைந்துள்ள நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைத் தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பகுதி வாரியாக மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் துறைமுகத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாமிற்கு தனியாக நிலத்தில் குழாய் பதித்து குடிதண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்து செல்லும் கடற்படை ரோந்து கப்பல்களுக்கும் தேவையான குடிதண்ணீர் இந்த முகாமில் இருந்துதான் மிதவை கப்பல் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு படையின் முக்கியத்துவம் கருதி குடிதண்ணீர் மெயின் பம்பிங் குழாயிலிருந்து பிரித்து தனியாக துறைமுக சாலை வழியாக கடற்படை முகாமிறகு கொண்டு செல்லப்பட்டுள்ள குடிநீர் குழாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

நேற்றும் இப்பகுதியில் உடைந்து குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் சாலையில் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குடிதண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாகிறது. வெயில் காலம் என்பதால் தற்போது ராமேஸ்வரத்தில் மூன்று நாட்களுக்கு, ஒரு சில பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் பணம் கொடுத்து தனியார் தண்ணீர் லாரிகளில் குடிநீரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட தூரத்தில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் காவிரி நீர் மக்களுக்கு பயன்படாமல் சாலையில் வீணாக ஓடுவது ராமேஸ்வரம் நகராட்சி பகுதியில் வழக்கமாகவிட்டது. குழாய் உடைப்பை சரி செய்து குடிதண்ணீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், மீனவர்களும் தெரிவித்துள்ளனர்.

Tags : Cauvery , ramanathapuram, rameshwaram,Cauvery joint Drinking water,Pampan
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி