×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் சேறு,சகதியுடன் வரும் தண்ணீரை சேகரிக்கும் அவலம்

* அதிகாரிகள் மீது  பொதுமக்கள் அதிருப்தி

ஆர்.எஸ்.மங்கலம் :  ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குழாய் உடைப்புகளில் வீணாகி வரும் தண்ணீரையும், டேங்கர் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. இதற்கு சரியான தீர்வு ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி பகுதி என்றால் ராமநாதபுரம் மாவட்டம் தான் என கணக்கில் கொண்டு இங்கு நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி திருச்சி அருகே காவிரி ஆற்றில் இருந்து புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி, தேவகோட்டை, சி.கே.மங்கலம், சனவேலி, ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர், சோழந்தூர் வழியாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கி வந்தனர். இதனால் ஏராளமான பகுதிகளில் காவிரி தண்ணீர் மிகவும் வரபிரசாதமாக அமைந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்த்தது. நாளடைவில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகுதிகளான மோர்பண்னை, உப்பூர், கடலூர், உகந்தான்குடி கண்ணாரேந்தல், மொச்சியேந்தல் திருப்பாலைக்குடி, சோழந்தூர், ஆனந்தூர், சனவெளி போன்ற சுற்றுவட்டார கிராமங்களில் குடி தண்ணீர், மிகுதியாக காணப்படுகின்றது. குடிதண்ணீர் குழாய்களின் மூலம் தண்ணீர் வராததால் பொதுமக்கள் டேங்கர்களில் வரும் தண்ணீரை, குடம் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

alignment=


ஒரு சில கிராமங்களில் டேங்கர் தண்ணீர் கூட வராததால் சுமார் 3, 4  கி.மீ தூரம் வரை நடந்தே சென்று தலையிலும், தள்ளுவண்டிகள் மூலமாகவும் தண்ணீர் எடுத்து வருகின்றனர். சனவேலி செங்கமடை, இந்திரா நகர் போன்ற பகுதிகளில் குழாய் உடைப்பு மற்றும் கசிவுகளில் வெளியேறும் சேறு, சகதியுடன் வரும் தண்ணீரை பெண்கள் சேகரித்து பயன்படுத்துவது மேலும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவிற்கு ஏற்பட காரணம் என்ன என்றால் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தேவகோட்டையில் இருந்து சி.கே.மங்கலம் கைகாட்டி செலுகை, கற்காத்துக்குடி, ஆப்பிராய், சனவேலி, செங்கமடை, சவேரியார் பட்டிணம், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் பல்வேறு இடங்களில் குழாய்களில் உடைப்பு மற்றும் கசிவு ஏற்பட்டு உள்ளது.

இதனை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு சில இடங்களில் குழாய்களில் உடைப்பு மற்றும் கசிவு ஏற்பட்டு வீணாகும் தண்ணீரை பல கி.மீ தூரம் கடந்து வந்து அந்த தண்ணீரையும் வடிகட்டி பிடித்து செல்லும் அவல நிலைதான் ஆங்காங்கே காணப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் கிடைக்காமல் திண்டாடுவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

கடந்த 6 மாதமாக இப்பகுதிகளில் சீராக குழாயில் குடி தண்ணீர் வராததால் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதே நிலை இன்னும் நீடித்தால் இப்பகுதிகளில் இருக்கக் கூடிய மற்றவர்களும் ஊரை காலி செய்து விட்டு செல்வதை தவிர வேறு வழி இல்லை என்று அப்பகுதி பொதுமக்கள் மனம் குமுறுகின்றனர்.

கலெக்டர் கவனிப்பாரா?

பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 4 வருடங்களாக சரியான மழை இல்லாமல் போனதால் கண்மாய், குளம், குட்டைகள் எல்லாம் வற்றி வறண்டு போய் விட்டது. கிணறு வெட்டினாலும் தண்ணீர் ஊறவில்லை. நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கீழே போய் விட்டது. விவசாயம் விளையாமல் பஞ்சமாக போன இந்த நேரத்தில் விலை கொடுத்து டேங்கர் தண்ணீரை வாங்குவதால் தினசரி ஒரு குடும்பத்திற்கு குறைந்தது சுமார் ரூ.100 முதல் ரூ.250 வரை செலவு ஆகிறது. டேங்கர் தண்ணீர் கூட சமயத்தில் கிடைக்க மாட்டேங்குது.

கிணறு, போர்வெல் போன்றவற்றிலும் தண்ணீர் பிடிக்க பல மணி நேரம் ஆகிறதாம். எனவே குடிநீர் குழாய் மூலம் வரும் தண்ணீரை சரியான முறையில் பராமரித்து குடி தண்ணீரை வழங்கினால், நாங்க தண்ணீருக்காக செலவிடும் பணத்தை உணவு மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி ஓட்டலாம். எனவே கலெக்டர் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் தடையில்லாமல் நிரந்தரமாக குடிதண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றனர்.

Tags : areas , RS Mangalam, drinking water, mud, karaikudi
× RELATED தலைகுந்தா பகுதியில் சாலையோரத்தில் புலி நடமாட்டம்: வீடியோ வைரல்