×

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் விதிகளை மீறும் பஸ்களால் விபத்து அபாயம்

* அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


ஆறுமுகநேரி : தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறியும் இயக்கப்படும் பஸ்களால் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு தனியார் மற்றும் அரசு  பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. மதுரை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு அதிகளவில் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில் 90 சதவீத அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் போக்குவரத்து விதிகளை மிறியும், அதிக வேகத்துடனும் செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மட்டுமின்றி எதிரே வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் காணப்படுகிறது.

குறிப்பாக ஆத்தூர் முதல் காயல்பட்டினம் வரை போக்குவரத்து நெருக்கடி அதிகளவில் உள்ளது. காலை நேரங்களில் பள்ளி வாகனங்கள், ஆம்னி பஸ்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நேரங்களில் தனியார் மற்றும் அரசு பஸ் ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை முந்துவதும், அதிக ஒலி சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தியும் வாகனத்தை இயக்குகின்றனர். ரயில்வே கேட் பூட்டியிருக்கும் நேரங்களில் வரிசையில் நிற்காமல் அனைத்து வாகனங்களையும் முந்தி கேட் பகுதியில் பஸ்சை நிறுத்தி கடும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். இதனால் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
ஆறுமுகநேரி நல்லூர் விலக்கில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடமுள்ளது.  

இங்கு விபத்துகளை தவிர்க்க சாலையில் சென்டர்மீடியன் தடுப்பு சுவர்களும், வேகத்தடையும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வழியாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கும், திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடிக்குசெல்லும் அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், வேகத்தடையில் சென்றால் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதால் விதிகளை மீறி எதிர்திசை சாலையில் சென்று வாகனத்தை தாங்கள் செல்லும் சாலைக்கு திருப்புகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே போன்று சென்ற பஸ், எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள், உயிர் தப்பினர். பெரும்பாலான டிரைவர்கள், இவ்வாறு விதிகளை மீறி வாகனத்தை இயக்குவதால் இருசக்கர வாகனங்கள், கார்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.

எனவே நல்லூர் விலக்கு பகுதி மட்டுமின்றி தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில், பெரிய அளவிலான விபத்துகள் நிகழும் முன்பு விதிகளை மீறி பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மீது போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Thoothukudi ,accident ,road ,Tiruchendur , Thoothukudi,thiruchendur ,High spped, alert, caution, traffic rules
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...