×

உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின்தங்கியது ; ஐஸ்லாந்து முதல் இடம்; ஆப்கானிஸ்தான் கடைசி இடம்

சிட்னி : உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் கீழே இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது. சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகள், நாட்டில் ராணுவத்தின் செயல்பாடு ஆகியவற்றை அளவீடுகளாக கொண்டு ஆய்வு நடத்தி 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து உலகிலேயே அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக இந்நாடு இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5 இடங்கள் பின் தங்கி 141வது இடத்திற்கு சென்றுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை 72வது இடத்திலும் நேபாளம் 76வது இடத்திலும் பங்களாதேஷ் 101வது இடத்திலும் உள்ளன.பூடான் 15வது இடத்திலும்  பாகிஸ்தான் 153வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஜப்பான் 9வது இடத்திலும்,அமெரிக்கா 128வது இடத்திலும்,  ரஷியா 154வது இடத்திலும் உள்ளது. பட்டியலில் 163வது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் உலகிலேயே அமைதி குறைவாக உள்ள நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியா, தெற்கு சூடான், ஏமன், ஈராக் ஆகியவை கடைசிக்கு முந்தைய 4 இடங்களில் உள்ளன.கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா, தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது.

அமைதி மிகுந்த நாடுகள் பட்டியல்

1   ஐஸ்லாந்து
2   நியூசிலாந்து
3   ஆஸ்திரியா
4    போர்ச்சுகல்
5    டென்மார்க்
6    கனடா
7    செ குடியரசு
8    சிங்கப்பூர்
9    ஜப்பான்
10    அயர்லாந்து

Tags : India ,world ,countries ,Iceland ,Afghanistan , Peace, List, Australia, Social Security, Domestic
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...