×

தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது வழக்கமான ஒன்று தான்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது வழக்கமான ஒன்று தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு நிர்வாகம் பற்றி ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கிக்கூறுவது மரபு என தெரிவித்தார். பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சி பிரச்சினைகளை பொதுவெளியில் அதிமுக நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை தனித்தனியே கேட்டறிய அதிமுக தலைமை ஏற்பாடு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியின் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், கட்சி தலைமையில் எந்தவித மாற்றங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேசியிருக்கலாம் என கூறப்பட்டது.

அதேபோல் தமிழக டிஜிபி நியமனம், தமிழக தலைமைச் செயலாளர் நியமனம் குறித்தும் பேசலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக விவாதித்திருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இது தொடர்பாகவும், அதிமுக கூட்டம் தொடர்பாகவும் அமைச்சர் ஜெயகுமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்று நேற்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முதல்வர் ஆளுநர் சந்திப்பு என்பது வழக்கமான ஒன்று தான் என தெரிவித்தார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி வருங்கால பொதுச்செயலாளர் என்று சுவரொட்டி வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் 2 அமைச்சர்கள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். அதிமுக-வுக்கு ஒருவரே தலைமை ஏற்பது என்பதற்கு அவசியமில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதையடுத்து 3 அதிருப்தி ஏம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்காதது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போது, அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அழைப்பு விடுப்பது சரியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Governor ,Tamilnadu ,Minister Jayakumar , Minister Jayakumar, Edappadi Palanisamy, Governor, Meeting
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...