×

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பா?: கோவையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் 2வது நாளாக சோதனை

கோவை: கோவையில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு என்ற புகாரில் அசாருதீன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்பு நகர் ஷாஜகான், கரும்புக்கடை ஷபியுல்லா, வின்சென்ட் ரோடு முகமது உசேன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் ஏழு பேர் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதையடுத்து 6 பேரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம், கொச்சியில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகள் கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், ஷாகின் ஷா என்ற இப்ராஹிம், ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், அக்ரம் ஜிந்தா ஆகிய ஆறு பேருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 7 இடங்களில் சோதனை நடத்தினர். இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 350க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றது. இந்த அமைப்புடன் தமிழகத்தில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தங்களது சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் குண்டு வெடிப்பு  நடைபெறுவதற்கு முன்பாக கோவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து அமைப்பின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது  அவர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் சமூக வலை தளங்களில் கருத்துகளை பரிமாறியது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இலங்கையில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் நடைபெற இருப்பது  விசாரணையில் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெரிந்து உடனடியாக இந்தியா ஏற்கனவே இலங்கையை எச்சரிக்கை செய்திருந்தது. இதன் பின் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தான் இலங்கையில் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 7 இடங்களில் நடைபெற்ற சோதனையில், 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்டுகள், 4 கணினி ஹார்டு டிஸ்குகள், 1 இணைய சேவை கருவி, 13 குறுந்தகடுகள், ஒரு கத்தி, ஒரு எலக்ட்ரிக் பேடன், 300 ஏர் கன் (துப்பாக்கி) குண்டுகள், துண்டுப் பிரசுரங்கள், பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் , 2 வது நாளாக இன்று 3 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : NIA ,locations ,Coimbatore , ISS Movement, Coimbatore, NIA officers, testing
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை