இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

ஐசிசி உலக கோப்பை தொடரில் நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. நியூசிலாந்து அணி 3 லீக் ஆட்டத்தில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக் உள்ளதால், இந்திய அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளதும் நியூசி. வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

போல்ட், சவுத்தீ, பெர்குசன், நீஷம் ஆகியோரின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கப்தில், நிகோல்ஸ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதே சமயம், பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியதால் இந்திய வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.

எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசி அசத்திய தொடக்க வீரர் ஷிகர் தவான், காயம் காரணமாக ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை கொடுத்துள்ளது. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 4வது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் களமிறக்கப்படலாம்.

ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் வேகமும், மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் - சாஹல் கூட்டணியும் நியூசி. பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால், பந்து ஸ்விங் ஆகும் வாய்ப்பு அதிகம். இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி.
நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரென்ட் போல்ட், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, ஹென்றி நிகோல்ஸ், ஈஷ் சோதி, ராஸ் டெய்லர், டாம் பிளண்டெல், கோலின் கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், டாம் லாதம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ.

Tags : India , India - New Zealand, today, is a test
× RELATED நாக்பூரில் இன்று 3வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு