×

சீனாவுக்கு ஆதரவான சட்டத்தை எதிர்த்து ஹாங்காங்கில் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: நாடாளுமன்ற முற்றுகையால் பணிந்தது அரசு

ஹாங்காங்: ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் வன்முறை வெடித்தது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்தாலும், அந்நாட்டுக்கென தனி அரசு நிர்வாகம், சட்டங்களை கொண்டுள்ளது. குற்றவாளிகளை அயல்நாட்டிடம் ஒப்படைப்பதற்கான, ஹாங்காங்கின் நாடு கடத்தும் சட்டத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதில், சீனாவையும் சேர்க்க வேண்டுமென 20 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே, கைதிகளை நாடு கடத்தும் சட்டத்தில் சீனாவையும் சேர்க்கும் வகையிலான புதிய சட்ட திருத்தம், ஹாங்காங் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஞாயிறன்று சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனாலும், சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதாக ஹாங்காங் நாட்டின் நிர்வாக செயலாளர் கேரிலாம் தெரிவித்தார்.

இந்நிலையில், சட்ட திருத்தம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடக்க  இருந்தது. அதைத் தொடர்ந்து, வரும் 20ம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அரசு தரப்பு தகவல்கள் வெளியாகின. இதை தடுக்க பொதுமக்கள் பிரமாண்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அனைத்து தரப்பு மக்களும் நேற்று அதிகாலை முதலே நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் குவியத் தொடங்கினர்.

மக்கள் கூடுவதைத் தடுக்க போலீசார் பல முக்கிய சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்தனர். அதையும் மீறி நாடாளுமன்ற சுற்றுப்புற சாலைகளில் உள்ள மால்கள், பெரிய கட்டிடங்களில் மக்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல லட்சக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால், அரசு தரப்பு பீதி அடைந்தது.

இதனால், காலை 11 மணி அளவில் கூட இருந்த நாடாளுமன்ற கூட்டம் கடைசி நிமிடத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. சட்ட திருத்தம் மீதான விவாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் அனைவரும் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், சட்ட திருத்தத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போக மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதி காத்தனர்.

மாலை 3 மணி கெடு முடிந்ததும், போலீசார் அமைத்த தடுப்புகளை தாண்டி நாடாளுமன்றத்திற்குள் நுழைய போராட்டக்காரர்கள் பலர் முன்னேறிச் சென்றனர். அவர்களை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், போராட்ட களத்தில் வன்முறை வெடித்தது. பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை இரும்பு ராடுகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், போலீசார் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது சுட்டனர். இதன் காரணமாக, போராட்ட களம் போர்க்களமானது. போலீசார் நடத்திய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். இருப்பினும், இந்த சட்ட திருத்தம் ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் அறிவித்து இருப்பதால், ஹாங்காங்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

அரசு எச்சரிக்கை:
நேற்று மாலை ஹாங்காங் அரசின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘போராட்டக்காரர்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் போலீசார் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வருகின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் நாடாளுமன்றத்தை சுற்றிய சாலைப் பகுதிக்கு வரவேண்டாம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக போராட்டத்தை கைவிட்டு திரும்ப வேண்டும் என அரசு கேட்டுக் கொள்கிறது,’ என்றார்.

Tags : struggle ,Hong Kong ,China , China, pro-law, protest against Hong Kong, people's struggle and violence
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்