×

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: 2 பெண் புரோக்கர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

நாமக்கல்: ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 2 பெண் புரோக்கர்களின் ஜாமீன் மனு, நாமக்கல் கோர்ட்டில் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, நர்ஸ் அமுதவள்ளி உட்பட 8 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைதான ராசிபுரம் நர்ஸ் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், சேலம் நர்ஸ் சாந்தி, மற்றும் பெங்களூரு அழகு கலை நிபுணர் ரேகா உள்பட 11 பேர்,  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த நர்ஸ் சாந்தி, பெண் புரோக்கர்கள் லீலா, செல்வி ஆகிய 3 பேரும் ஜாமீன் கேட்டு, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனு நீதிபதி இளவழகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் தனசேகரன் 3 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து லீலா, செல்வி ஆகிய இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி இளவழகன், நர்ஸ் சாந்தியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். லீலாவின் ஜாமீன் மனு 5 வது முறையாகவும், செல்வியின் ஜாமீன் மனு 3 வது முறையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Rasipuram, children's sales, bail petition, discount
× RELATED சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறை விதிப்பு