×

5 நாட்கள் தொடர்ந்து பணி செய்ததால் பஸ்சில் மயங்கி விழுந்து டிரைவர் பரிதாப சாவு: வேலூரில் பரபரப்பு

வேலூர்: 5 நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததால் அரசு பஸ்சிலேயே டிரைவர் சரிந்து விழுந்து  உயிரிழந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து கழகம் 8 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு சுமார் 22 ஆயிரம் பஸ்கள் இயங்கி வருகிறது. இவற்றில் சுமார் 1.40 லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக பல டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் விடுமுறையின்றி பணி செய்வதாக கூறப்படுகிறது. வேலை பளு காரணமாக பலர் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

வேலூர் கொணவட்டம் 2- டிப்போவில் டிரைவராக நாமக்கல் மாவட்டம், துறையூர் அடுத்த அழகபுரியை சேர்ந்த தர்மராஜ்(40) பணி புரிந்து வந்தார். இவர் கடந்த 5 நாட்களாக விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியில் இருந்துள்ளார். பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு வேலூருக்கு பஸ்சை இயக்கிய அவருக்கு, நேற்று காலை சென்னை தாம்பரம் செல்லும்படி அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் அவர் நேற்று காலை கொணவட்டத்தில் இருந்து பஸ்சை எடுத்துக்கொண்டு வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தார். ஏற்கனவே உடல்நலம் பாதித்திருந்ததாக கூறப்படும் தர்மராஜ் திடீரென பஸ்சிலேயே மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த கண்டக்டர், மற்றும் சக பஸ் டிரைவர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அளித்த வேலை பளு காரணமாக டிரைவர் தர்மராஜ் இறந்ததாக பஸ் டிரைவர்கள் குற்றம்சாட்டினர்.

Tags : Vellore , Driver, Faridabad's death, Vellore, Thrissur
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...