×

மக்களின் கவலைகளை தீர்க்க விரைவில் ஆட்சிப்பொறுப்பில் அமருவோம்: பொள்ளாச்சியில் மு.க.ஸ்டாலின் உறுதி

பொள்ளாச்சி: அதிமுகவின் 12 தொகுதிகளை நாம் கைப்பற்றியுள்ளோம். மக்களின் கவலைகளை தீர்க்க விரைவில் ஆட்சி பொறுப்பில் அமருவோம் என்று  பொள்ளாச்சியில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் மக்களவை பொதுத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொங்கு மண்டலம், அதிமுக கோட்டை என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. ஆனால், இன்று அந்த வார்த்தை முறியடிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டல மக்கள், மிகப்பெரிய வெற்றியை நமக்கு தந்துள்ளார்கள். பல தேர்தல்களில், கொங்கு மண்டல மக்கள் ஏமாற்றப்பட்ட காரணத்தால், இனியும் ஏமாற தயாரில்லை என முடிவெடுத்து, நமக்கு வாக்களித்துள்ளார்கள். அதனால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை தேடித்தந்துள்ளார்கள். இது, சரித்திரத்தில் பேசப்படும் வெற்றி.

அடுத்து, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் நமக்கு வெற்றி காத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை வருடத்தில் வருமா அல்லது ஆறு மாதத்தில் வருமா? அல்லது 3 மாதமா? அல்லது உடனடியாக வரக்கூடுமா? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்கிறோம்.
40 தொகுதியிலும் நானே வேட்பாளர் என மக்களோடு மக்களாக அமர்ந்து பிரசாரம் மேற்கொண்டேன். மக்களிடம் செல்வோம், மக்களோடு இருப்போம் என்று பிரசாரம் செய்தேன். அதற்காக, இந்த வெற்றி கிடைத்துள்ளது.  அதுமட்டுமின்றி, 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், நாம் 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ஆளும்கட்சியாக உள்ள அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெற்றியில் 13 பெரிதா, 9 பெரிதா எனக்கூட சிலருக்கு தெரியவில்லை. நாம் வெற்றிபெற்ற 13 தொகுதியில் ஒன்று திருவாரூர். இது, ஏற்கனவே கலைஞர் வென்றது. இது போக, அதிமுகவிடம் இருந்த 12 தொகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். இது யாருக்கு வெற்றி. இன்று வேண்டுமானால் தமிழகத்தில் நாம் ஆட்சி பொறுப்புக்கு வராமல் இருக்கலாம். விரைவில், நாம்தான் ஆட்சி பொறுப்பில் அமர உள்ளோம். நம்மை விமர்சனம் செய்வோரின் கவலையை விரைவில் தீர்த்து வைப்போம்.

மக்களை தேடித்தான் இனி அரசியல்வாதிகள் செல்ல வேண்டும் என்ற நிலையை நாம் இப்போது உருவாக்கியுள்ளோம். இதை மட்டும் செய்தால் போதும். கடைசி நேரத்தில் எவ்வளவுதான் நோட்டுகளை கொண்டுவந்து இறைத்தாலும், அது பலிக்காது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு மரணஅடி வழங்கியுள்ளோம். இதேபோல் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் மரண அடி கொடுப்போம். தமிழக மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை தந்துள்ளார்கள். தமிழக மக்களை பற்றி சிந்திக்க இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை. தமிழக மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. விவசாயிகள் பல கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களது பிரச்னையை தீர்த்து வைக்க முடியாத அரசாக அதிமுக அரசு உள்ளது. இனி, நாம் அந்த பணியில் முழுமையாக ஈடுபடுவோம்.

விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்கிறார் எடப்பாடி. கலைஞர் ஆட்சியில் எத்தனையோ கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்தோம். ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளில் ஏதாவது ஒரு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்துள்ளார்களா? மக்கள் குடிநீரின்றி வாடுவதை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மத்தியில் அமர்ந்துள்ள பிரதமர் மோடிக்கும் கவலை இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சேலம் செல்கிறார். 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற துடிக்கிறார். போராட்டத்தை திமுக தூண்டுகிறது என நம் மீது பழி போடுகிறார். ஆனால், போராடடம் நடத்திய மக்களை அழைத்து பேசி இருக்கிறாரா? தைரியம் இருந்தால் அழைத்து பேசட்டுமே.

இந்தி மொழியை எப்படியாது தமிழகத்தில் திணிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு, மும்மொழி திட்டம் என்ற புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை வெளியிடுகிறார்கள். இதை, நாங்கள் ஏற்க மாட்டோம் என அறிவிக்க எடப்பாடிக்கு திராணி இல்லை. நமது போராட்ட அறிவிப்புக்கு பணிந்து, மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது. தமிழகத்தில் மும்மொழி திட்டத்தை திமுக என்றும் ஏற்காது. இதேபோல், துணிச்சலாக அறிவிக்க முதல்வருக்கு தைரியம் இல்லை. அதை விடுத்து, அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தமிழை படிக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிடுகிறார். இதற்கு அர்த்தம் என்ன? தமிழ்நாட்டில் இந்தியை ஏற்க தயார் என மறைமுகமாக பதிவு செய்துள்ளார். கடும் எதிர்ப்புக்கு பிறகு பின்வாங்கியுள்ளார். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தை மூடி மறைக்கும் முயற்சியில் எப்படி ஈடுபட்டாலும், அதை திமுக வெளியே கொண்டு வந்தே தீரும். விரைவில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமரும். அப்போது, பொள்ளாச்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த களங்கம் துடைக்கப்படும். இதுதான், எனது முதல் வேலையாக இருக்கும். அதிமுகவுக்குள் பல அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டு வருகிறது. அவர்களால், தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாது. தமிழக மக்களை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் ேபசினார்.

Tags : MK Stalin ,Pollachi , Pollachi, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...